தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

இத்தாலிய அருங்கொடை இயக்கக் கூட்டத்திற்கு திருத்தந்தை செய்தி

கிறிஸ்தவர்கள், இவ்வுலகில் மனித உடன்பிறந்த உணர்வை வளர்ப்பதற்கு ஆற்றும் பணிகளில், அவர்கள் மத்தியில் நிலவும் பிரிவினைகளுக்கு இடம்கொடுக்காதிருக்க திருத்தந்தை வலியுறுத்தல்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகில் மனித உடன்பிறந்தநிலையை வளர்ப்பதற்கு, கிறிஸ்தவர்கள் அனைவரும், ஒன்றுசேர்ந்து பணியாற்றுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 15, இச்சனிக்கிழமையன்று, ஓர் இத்தாலிய கிறிஸ்தவ இயக்கத்திற்கு அனுப்பிய ஒளிவலைக்காட்சி செய்தி வழியாக கேட்டுக்கொண்டார்.

“கிறிஸ்துவில் உடன்பிறந்த உணர்வு” என்ற தலைப்பில், இத்தாலிய கத்தோலிக்க, மற்றும், பெந்தக்கோஸ்து கிறிஸ்தவர்கள் இணைந்து, இச்சனிக்கிழமையன்று நடத்திய, அருங்கொடை இயக்க மெய்நிகர் ஆலோசனை கூட்டத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய செய்தியில், இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

1992ம் ஆண்டில் இத்தாலியின் பாரி நகரில் இடம்பெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு நிகழ்வுக்குப்பின், மனித உடன்பிறந்தநிலையை ஊக்குவிப்பதற்கு, ஒவ்வோர் ஆண்டும், இவ்வாறு கூட்டம் நடத்துகின்ற, இந்த அருங்கொடை இயக்கத்தினரைப் பாராட்டிப் பேசியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவர்கள், இவ்வுலகில் மனித உடன்பிறந்த உணர்வை வளர்ப்பதற்கு ஆற்றும் பணிகளில், அவர்கள் மத்தியில் இன்றும் நிலவும் பிரிவினைகளுக்கு இடம்கொடுக்காமல் இருக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் எல்லாரும், ஒன்றிணைந்து நடக்கவும், பணியாற்றவும், ஒருவர் ஒருவரின் காலடிகளைக் கழுவவும் வேண்டுமென்று கூறியுள்ளார்.

உடன்பிறந்த உணர்வை கருப்பொருளாக அமைத்து நடைபெறும் இக்கூட்டம், உடன்பிறந்த உணர்வு உரையாடல் பற்றியது என்றும், “நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், ‘என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன் எனச் சொல்” (யோவா.20:17)  என்று இயேசு, மகதலா மரியாவுக்குக் கூறிய இறைவார்த்தைகள், இக்கூட்டத்திற்கு வழிகாட்டுதல்களாக உள்ளன என்றும், திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

உங்களோடு செபிக்கின்றேன், உங்களுக்காகச் செபிக்கின்றேன், எனக்காவும் செபியுங்கள் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்த உணர்வு குறித்த  இக்கூட்டத்திற்கு நன்றி என்று, தன் செய்தியை நிறைவுசெய்துள்ளார்.

இந்த உடன்பிறந்த உணர்வு உரையாடல் அமைப்பை 1992ம் ஆண்டில் பாரியில் உருவாக்கிய, இயேசு கத்தோலிக்க குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான Matteo Calisi அவர்களும், இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையின் போதகர் Giovanni Traettino அவர்களும், இந்த அருங்கொடை இயக்க கூட்டத்தில் உரையாற்றினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 May 2021, 15:44