தேடுதல்

Vatican News
பல்கேரியா குடியரசின் அரசுத் தலைவருடன் திருத்தந்தை பிரான்சிஸ் பல்கேரியா குடியரசின் அரசுத் தலைவருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

பல்கேரியா, மாசிடோனியா அரசுத்தலைவர்களுடன் திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்கேரியா குடியரசின் அரசுத் தலைவரையும், வடக்கு மாசிடோனியா குடியரசின் அரசுத்தலைவரையும் தனித்தனியே சந்தித்துப் பேசினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 27, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் மேற்கொண்ட ஒரு சில சந்திப்புக்களில், பல்கேரியா குடியரசின் அரசுத் தலைவரையும், வடக்கு மாசிடோனியா குடியரசின் அரசுத்தலைவரையும் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.

பல்கேரியா குடியரசின் அரசுத்தலைவர், Rumen Georgiev Radev அவர்களும், அவருடன் வருகை தந்த அரசு உயர் அதிகாரிகள் குழுவையும் திருத்தந்தை சந்தித்ததையடுத்து, அரசுத்தலைவர் Radev அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

அதேவண்ணம், வடக்கு மாசிடோனியா குடியரசின் அரசுத்தலைவர், Stevo Pendarovsky அவர்கள், தன்னுடன் வந்திருந்த அரசு அதிகாரிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்தபின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

பல்கேரியா, மற்றும், வடக்கு மாசிடோனியா குடியரசுகளுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அக்குடியரசு நாடுகளில், கல்வி மற்றும், நலவாழ்வுத் துறைகளில், கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள் ஆகியவை குறித்தும், குறிப்பாக, இந்த பெருந்தொற்று காலத்தில், அரசும், திருஅவையும் இணைந்து மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்தும், இச்சந்திப்புகளில் பகிர்ந்துகொள்ளப்பட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

27 May 2021, 13:51