தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன் லாத்வியா அரசுத்தலைவர் திருத்தந்தையுடன் லாத்வியா அரசுத்தலைவர்   (Vatican Media)

மக்களிடையே அமைதியும் உடன்பிறந்த நிலையும் உருவாக

மனிதாபிமானம், ஆன்மிகம், மனித மாண்பு, மற்றும் குடும்ப பாதுகாப்பு ஆகியவைகளில் லாத்வியா நாட்டிற்கு திருஅவை வழங்கியுள்ள நல்ல பங்களிப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

லாத்வியா நாட்டின் அரசுத் தலைவர் Egils Levits அவர்கள், மே 10, இத்திங்கள் காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

திருத்தந்தைக்கும், அரசுத்தலைவருக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பிற்குப்பின், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின், மற்றும் பன்னாட்டு உறவுகள் திருப்பீடத்துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகியோரையும் சந்தித்து உரையாடினார், அரசுத்தலைவர் Levits.

இச்சந்திப்புகளின்போது, லாத்வியாவிற்கும் வத்திக்கானுக்கும் இடையே நிலவிவரும் நல்லுறவுகள் குறித்து மகிழ்ச்சி வெளியிடப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையே நூறாண்டுகளாக நிலவும் அரசியல் உறவு நினைவுகூரப்பட்டு, கிறிஸ்தவ விசுவாசமும் கத்தோலிக்க திருஅவையும் லாத்வியா நாட்டிற்கு வழங்கியுள்ள நல்லபங்களிப்பு, குறிப்பாக, மனிதாபிமானம், ஆன்மீகம், மனிதமாண்பு, மற்றும் குடும்ப பாதுகாப்பு ஆகியவைகளில் வழங்கப்பட்டுள்ள பங்களிப்பு கோடிட்டுக் காட்டப்பட்டன.

தல அளவிலும், அனைத்துலக அளவிலும் இருதரப்பினரும் எவ்வாறு ஒத்துழைத்து செயல்படமுடியும் என்பது குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், மக்களிடையே அமைதியையும், உடன்பிறந்த நிலையையும் உருவாக்க, எத்தகைய முயற்சிகள் தேவைப்படுகின்றன என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டன என்று, திருப்பீட தகவல் தொடர்புத் துறை வெளியிட்ட செய்தி கூறுகிறது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 10, இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தி, 'பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்' என்ற இயேசுவின் வார்த்தைகளை மையப்படுத்தி அமைந்திருந்தது.

"பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் (மத் 7:12). நமக்கு பிறர் செவிமடுக்க வேண்டுமா? நாம் முதலில் செவிமடுப்போம். நமக்கு ஊக்கம் தேவையா? பிறரை முதலில் ஊக்கப்படுத்துவோம். நம்மீது அக்கறை காட்ட நமக்கு பிறர் தேவை என உணர்கிறோமா? தனியாக இருப்போர், மற்றும் கைவிடப்பட்டோர் மீது அக்கறை காட்டி செயல்படுவோம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

10 May 2021, 15:20