தேடுதல்

Vatican News
அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம்  (Vatican Media)

அர்ப்பண வாழ்வு புதிய நூல் – திருத்தந்தையின் அணிந்துரை

அருள்பணித்துவ வாழ்வு, குடும்ப வாழ்வு, மற்றும் துறவற வாழ்வு என்ற மூன்று வழிகளை ஊக்கப்படுத்திவரும் திருஅவையில், இவை மூன்றும் கிறிஸ்தவ வாழ்வுக்கு இன்றியமையாதவை என்பதை உணர உதவும் நூல்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கத் திருஅவையில் விளங்கும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைக் குறித்து, பிரான்சிஸ்கன் சபையைச் சேர்நத் 90 வயதுக்கும் மேற்பட்ட துறவி ஒருவரும், ஓர் இளைய துறவியும் இணைந்து வழங்கியுள்ள நூல், அன்னையாம் திருஅவையைப் புரிந்துகொள்வதற்கு பெரிதும் உதவியாக உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதியதொரு நூலுக்கு வழங்கியுள்ள அணிந்துரையில் கூறியுள்ளார்.

"உப்பு மற்றும் புளிக்காரத்தைப் போல - திருஅவையில் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் இறையியல் குறிப்புகள்" என்ற தலைப்பில், மே 14, இவ்வெள்ளியன்று வெளியாகும் ஒரு நூலுக்கு திருத்தந்தை வழங்கியுள்ள அணிந்துரையில், Valentino Natalini மற்றும் Ferdinando Campana என்ற இரு பிரான்சிஸ்கன் துறவியரின் எண்ணங்கள், திருஅவைக்கு மிகவும் உதவியாக உள்ளன என்று கூறியுள்ளார்.

அருள்பணித்துவ வாழ்வு, குடும்ப வாழ்வு, மற்றும் துறவற வாழ்வு என்ற மூன்று வழிகளை ஊக்கப்படுத்திவரும் திருஅவையில், இந்த மூன்று வழிகளுக்கிடையே போட்டிகளும், மோதல்களும் நிலவுவதற்கு பதிலாக, இவை மூன்றும் கிறிஸ்தவ வாழ்வுக்கு இன்றியமையாதவை என்பதை இந்நூல் உணர்த்துகிறது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

திருஅவையின் வரலாறு முழுவதிலும், உண்மையான கிறிஸ்தவ வாழ்வையும், பணிகளையும் பறைசாற்றுவதற்குப் பதில், அருள்பணித்துவ ஆதிக்கம், மற்றும், இவ்வுலகம் சார்ந்த ஆன்மீகம் ஆகியவை வெளிப்பட்டுள்ளன என்று தன் அணிந்துரையில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதற்கு நேர்மாறான சாட்சியங்களும் திருஅவையில் இருந்து வந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

திருஅவையின் பல்வேறு காலக்கட்டங்களில் அர்ப்பணிக்கப்பட்ட வாழவைக் குறித்து திருஅவை வழங்கியுள்ள படிப்பினைகளை, வயதில் முதிர்ந்த பிரான்சிஸ்கன் துறவி தொகுத்துள்ளார் என்றும், இந்த படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு இளையத் துறவி தன் எண்ணங்களையும், தியானங்களையும் வழங்கியுள்ளார் என்றும், திருத்தந்தை தன் அணிந்துரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், திருஅவையில் நிலவும் இந்த மூன்று வழிகளைச் சார்ந்தவர்களுக்கும் வழங்கிய திருத்தூது அறிவுரை மடல்களான Vita consecrata, Pastores dabo vobis, மற்றும், Christifideles laici என்ற மடல்களையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

அர்ப்பணம், இறைவாக்குரைத்தல், மறைப்பணியாற்றுதல், திருவழிபாடு, ஆன்மீக வாழ்வு, புனிதமடைதல் என்ற பல்வேறு தலைப்புக்கள் அடங்கிய இந்நூல், வத்திக்கான் பதிப்பகத்தாரால் மே 14, இவ்வெள்ளியன்று வெளியிடப்படுகிறது.

13 May 2021, 15:05