தேடுதல்

Vatican News
அருளாளராக உயர்த்தப்படவிருக்கும் நீதிபதி ரொசாரியோ லிவாத்தினோ அருளாளராக உயர்த்தப்படவிருக்கும் நீதிபதி ரொசாரியோ லிவாத்தினோ 

நேர்மையாளராக, இறைவாக்கினராக வாழ்ந்த நீதிபதி லிவாத்தினோ

"இளையோரே, நான் உங்களுக்கு என்ன செய்துவிட்டேன்?" என்று, நீதிபதி லிவாத்தினோ அவர்கள் கூறிய இறுதிச்சொற்கள், இளையோரை, கொலைக்குற்றங்களில் ஈடுபடுத்தும் ஏரோதுக்களை நோக்கி கூறப்பட்டுள்ளன – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நீதிபதி லிவாத்தினோ அவர்கள், தன்னைச் சுட்டுக்கொன்ற இளையோரைப் பார்த்து, "இளையோரே, நான் உங்களுக்கு என்ன செய்துவிட்டேன்?" என்று, தான் சாவதற்கு முன் சொன்ன இறுதிச்சொற்கள், அவர், நேர்மையாளராக, இறைவாக்கினராக வாழ்ந்தார் என்பதற்கு சான்றாக விளங்குகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரையில் கூறியுள்ளார்.

இத்தாலிய குற்றவியல் நீதிபதியாகப் பணியாற்றிய ரொசாரியோ ஆஞ்சலோ லிவாத்தினோ (Rosario Angelo Livatino) அவர்கள், 1990ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி, மாஃபியா குற்றக்கும்பலால் ஏவிவிடப்பட்ட இளையோர் குழுவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

லிவாத்தினோ பற்றிய நூலுக்கு திருத்தந்தை அணிந்துரை

இறையடியாராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நீதிபதி லிவாத்தினோ அவர்கள், மே 9ம் தேதி, வருகிற ஞாயிறன்று, இத்தாலியின் சிசிலி தீவின் அக்ரிஜெந்தோ (Agrigento) மறைமாவட்ட பேராலயத்தில் அருளாளராக உயர்த்தப்படுகிறார்.

இத்தருணத்தையொட்டி, லிவாத்தினோ அவர்களின் வாழ்வை மையப்படுத்தி, "ரொசாரியோ ஆஞ்சலோ லிவாத்தினோ - இரத்தம் சிந்தாத மறைசாட்சிய வாழ்விலிருந்து, இரத்தம் சிந்திய மறைசாட்சிய மரணம் வரை" என்ற தலைப்பில் வெளியாகும் ஒரு நூலுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அணிந்துரை வழங்கியுள்ளார்.

இன்றைய ஏரோதுக்களை நோக்கி...

வின்சென்சோ பெர்தொலோனே அவர்கள் எழுதியுள்ள இந்நூலின் அணிந்துரையில், லிவாத்தினோ அவர்கள், தன் மரணத்திற்கு முன் கூறிய அந்த இறுதிச் சொற்கள், இன்றைய உலகில், இளையோரை, கொலைக்குற்றங்களில் ஈடுபடுத்தும் ஏரோதுக்களை நோக்கி கூறப்பட்டுள்ளன என்று, திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

தன் மத நம்பிக்கையின் அடிப்படையில் தன் நீதிபதி பணியை அர்ப்பண உணர்வுடன் மேற்கொண்ட லிவாத்தினோ அவர்கள், நீதிபதிகளுக்கு மட்டுமல்லாமல், நீதி சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்று திருத்தந்தை தன் அணிந்துரையில் கூறியுள்ளார்.

விசுவாச வாழ்வு என்னும் போராட்டம்

விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தை, பணிவோடு, கனிவோடு, மற்றும் கருணையோடு ஒவ்வொரு நாளும் வாழ்ந்துவந்த ரொசாரியோ ஆஞ்சலோ லிவாத்தினோ அவர்கள், நாம் அனைவரும் பின்பற்றவேண்டிய உன்னதமான வாழ்வுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியின் Canicattì எனுமிடத்தில் 1952ம் ஆண்டு பிறந்த Rosario Angelo Livatino அவர்கள், குற்றவியல் நீதிபதியாகப் பணியாற்றிய வேளையில், சிசிலியில் குற்றங்களைத் தொடர்ந்து வந்த மாஃபியா குழுவினரை கண்டித்து விடுத்துவந்த தீர்ப்புகளின் விளைவாக, 1990ம் ஆண்டு, செப்டம்பர் 21ம் தேதி, தன் பணிக்குச் சென்ற வேளையில், சாலையில், சுட்டுக்கொல்லப்பட்டார்.

05 May 2021, 14:07