தேடுதல்

திருத்தந்தை: நிதிக்குப் பொறுப்பானவர்களுக்காகச் செபிப்போம்

விலைகளை உயர்த்தியுள்ள நிதி உலகம், சாதாரண மக்களின் வாழ்விலிருந்து வெகு தொலைவில் உள்ளது – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“நிதிக்குப் பொறுப்பானவர்கள், அரசுகளுடன் இணைந்து, நிதிச்சந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், அதன் ஆபத்துக்களிலிருந்து, குடிமக்களைப் பாதுகாப்பதற்கும் உழைக்கவேண்டும் என்று, நாம் எல்லாரும் ஒன்றுசேர்ந்து இறைவனை மன்றாடுவோம்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

மே 04, இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மே மாத செபக்கருத்தை மையப்படுத்தி, ஒன்றுசேர்ந்துசெபிப்போம் (#PrayTogether), செபக்கருத்து (#PrayerIntention) ஆகிய இரு ஹாஷ்டாக்குகளுடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,  நிதி உலகத்திற்காக இறைவேண்டல் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மே மாத பொதுக் கருத்து - நிதி உலகம்

மேலும், தன் மே மாத செபக்கருத்து குறித்து, ஒளிவலைக்காட்சியில் பேசியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொழிலை உருவாக்கும் ஓர் உண்மையான பொருளாதாரம், நெருக்கடியில் உள்ளது, தற்போது வேலைவாய்ப்பின்றி எத்தனையோ மக்கள் உள்ளனர், ஆயினும், நிதிச்சந்தைகள், இப்போதுள்ளதுபோல் ஒருபோதும் விலைகளை உயர்த்தியதில்லை என்று கவலை தெரிவித்துள்ளார்.  

விலைகளை உயர்த்தியுள்ள நிதி உலகம், சாதாரண மக்களின் வாழ்விலிருந்து வெகு தொலைவில் உள்ளது என்றும், நிதி அமைப்பு, ஒழுங்குபடுத்தப்படவில்லையெனில், அது, வெறுமனே, பல்வேறு நிதிக்கொள்கைகளால் வழிநடத்தப்படும் ஆய்வுக்கூடமாக மாறும் என்றும், திருத்தந்தை எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

இந்நிலை, தாங்கிக்கொள்ளமுடியாதது, மற்றும், ஆபத்தானது என்றும், இதன் வேதனையான விளைவுகளால் வறியோர் துன்புறாமல் இருப்பதற்காக, நிதி அமைப்பு, கவனத்துடன் ஒழுங்குபடுத்தப்படவேண்டும், என்பதை, தான் மிகவும் வலியுறுத்த விரும்புவதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.

நிதி அமைப்பு, பணிபுரிவதன் வடிவமாகவும், மக்களுக்குத் தொண்டாற்றுவதாகவும், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தைப் பராமரிப்பதாகவும் செயல்படவேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டுள்ள திருத்தந்தை, நீதியும், எவரையும் ஒதுக்காமல், அனைவரையும் உள்ளடக்கிய, மற்றும், நீடித்தநிலையான, ஒரு மாறுபட்ட பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் துவக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

இதை நம்மால் ஆற்றமுடியும் என்று, தன் ஒளிவலைக்காட்சி செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிதிக்குப் பொறுப்பானவர்கள், அரசுகளுடன் இணைந்து, நிதித்துறையை ஒழுங்குபடுத்துவதற்கும், குடிமக்களை, அதன் ஆபத்துக்களிலிருந்து, பாதுகாப்பதற்கும் உழைக்குமாறு, இந்த மே மாதத்தில் நாம் அனைவரும் செபிப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 May 2021, 14:43