தேடுதல்

Lazare குழுவினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் Lazare குழுவினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 

“Lazare” பிறரன்பு அமைப்பினர் சந்திப்பு

உடன்பிறந்த உணர்வு, மற்றும், மனித உறவுகள் நிறைந்த ஒரு சமுதாயத்தை, ஓர் உலகை கட்டியெழுப்பவேண்டிய அவசியம், எக்காலத்தையும்விட, இக்காலத்தில் அதிகம் தேவைப்படுகின்றது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மே 21, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் தன்னை சந்தித்த, “Lazare” எனப்படும், கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு ஒன்றின் பிரதிநிதிகள், மனித உடன்பிறந்த உணர்வில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆற்றிவரும் நற்பணிகளுக்கு, திருத்தந்தை தன் நன்றியைத் தெரிவித்தார்.

மற்றவரோடு ஒன்றித்து வாழ்தல், அன்புகூரப்படுவதாக உணர்தல், குடும்பத்தில் நன்மனத்தைக் கற்றுக்கொள்தல், எளிமையான குழுவாழ்வு போன்ற கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, உறுதியான குழுமமாக நிலைத்திருப்பதற்கு, கிறிஸ்துவோடு உறுதியான நட்பில் வளரவேண்டும் என்று, திருத்தந்தை விளக்கினார்.

இளையோரின் நற்பணிகள்

இந்த Lazare அமைப்பைச் சார்ந்த இளையோர், வீடற்றோர், புறக்கணிக்கப்பட்டோர், மனித உரிமைகள் மறுக்கப்பட்டோர் போன்ற மக்களுக்கு பணியாற்றுவதன் வழியாக, கிறிஸ்துவுக்கே பணியாற்றுகின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, இந்த நற்பணிகள் வழியாக, ஒவ்வொரு மனிதரின் கதையும் புனிதமானது மற்றும், அவர்கள் விலைமதிப்பற்ற கொடை என்பதை, மற்றவர் புரிந்துகொள்ளச் செய்கின்றனர் என்று கூறினார்.

நிச்சயமற்ற ஒரு சூழலை உருவாக்கியுள்ள இக்காலக்கட்டத்தில், இளையோர் தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்காமல், ஒருமைப்பாட்டுணர்வில் வாழ்கின்ற ஓர் அனுபவத்தை அடைந்துள்ளனர் என்றும், தன்னம்பிக்கையின்றி, புறக்கணிக்கப்பட்டதாக உணர்கின்ற மக்களின் வாழ்வை வளப்படுத்த, இந்த அனுபவம், ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும், திருத்தந்தை கூறினார்.

Lazare அமைப்பின் இளையோர், தாங்கள் பணியாற்றும் மக்களுக்கு, கடவுளின் புன்னகையாக, கண்களாக, கரங்களாக இருக்க விரும்புகின்றனர் என்றும், அவர்கள், வார்த்தைகளில் மட்டுமல்லாமல், செயல்களிலும் கிறிஸ்தவர்களாக வாழ்வதன் வழியாக, அந்த அமைப்பு, மற்ற நாடுகளிலும் விரிவடைய உதவுவார்கள் என்றும், திருத்தந்தை கூறினார்.

தன்னலம், தனியுரிமைக்கோட்பாடு, புறக்கணிப்பு, ஏழைகள் மற்றும், பலவீனர்கள் மீது வெறுப்பு ஆகியவற்றை வளர்க்கும் இன்றைய கலாச்சாரத்தின் மத்தியில், கடவுளின் இரக்கத்திற்குச் சான்றுகளாக வாழுமாறும், நம்பிக்கை மற்றும், அன்பின் ஒளியை மற்றவருக்கு வழங்க அஞ்சவேண்டாம் என்றும் திருத்தந்தை, இளையோரைக் கேட்டுக்கொண்டார்.

Lazare அமைப்பினர் தங்களின் கொள்கைகளுக்கு என்றென்றும் பிரமாணிக்கமாக இருக்குமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்த உணர்வு, மற்றும், மனித உறவுகள் நிறைந்த ஒரு சமுதாயத்தை, ஓர் உலகை கட்டியெழுப்பேவண்டிய அவசியம், எக்காலத்தையும்விட, இக்காலத்தில் அதிகம் தேவைப்படுகின்றது என்று குறிப்பிட்டார்.

21 May 2021, 15:15