தேடுதல்

Vatican News
லெபனான் நாட்டில் மக்களால் கைவிடப்பட்ட பாரம்பரிய இல்லம் லெபனான் நாட்டில் மக்களால் கைவிடப்பட்ட பாரம்பரிய இல்லம் 

திருத்தந்தையுடன் லெபனான் கிறிஸ்தவத் தலைவர்கள் சந்திப்பு

திருத்தந்தை : லெபனான் கிறிஸ்தவத் தலைவர்களுடன் இணைந்து அந்நாட்டின் தற்போதைய நிலைகள் குறித்து ஆழ்ந்து தியானிக்க உள்ளதுடன், அந்நாட்டின் அமைதி, மற்றும் நிலையான தன்மைக்காக இணைந்து செபிக்க உள்ளோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்த பல மாதங்களாக அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளை சந்தித்துவரும் லெபனான் நாட்டின் கிறிஸ்தவ சமூகத் தலைவர்களை ஜூலை மாதம் முதல் தேதி வத்திக்கானில் சந்திக்கவுள்ளதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.

மே மாதம் 30ம் தேதி வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் இதனை அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாளில், அத்தலைவர்களுடன் இணைந்து, அந்நாட்டின் தற்போதைய நிலைகள் குறித்து ஆழ்ந்து தியானிக்க உள்ளதுடன், அந்நாட்டின் அமைதி, மற்றும் நிலையான தன்மைக்காக இணைந்து இறைவேண்டல் செய்ய உள்ளதாகவும், எடுத்துரைத்தார்.

லெபனான் நாட்டின் அமைதியான வருங்கால சுமுக வாழ்வை நோக்கமாகக் கொண்டு இடம்பெற உள்ள இந்த சந்திப்புக்கு தயாரிக்க உதவும் நோக்கத்தில், தங்கள் செபங்களை அர்ப்பணிக்குமாறு கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால், பெரும் துயர்களை அனுபவித்துவரும் லெபனான் மக்களுக்காக உதவிகளை ஆற்றவேண்டும் என, ஐரோப்பிய ஒன்றிய அவையை கடந்த வாரமே, ஐரோப்பிய ஆயர் பேரவை விண்ணப்பித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இஸ்பெயின் நாட்டில் கடந்த சனிக்கிழமையன்று, மூன்று பொதுநிலை பெண் இறையடியார்கள்  அருளாளர்களாக உயர்த்தப்பட்ட நிகழ்வு குறித்தும் மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறையடியார்கள் María Pilar Gullón Yturriaga, Octavia Iglesias Blanco, Olga Pérez-Monteserín Núñez ஆகிய மூவரும், இஸ்பெயினின் Astorga  எனுமிடத்தில் நடந்த திருப்பலியில் அருளாளர்களாக உயர்த்தப்பட்டது குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துணிச்சல் மிக்க இந்த மூன்று பெண்களும், போர்க்காலத்தில் காயமடைந்த வீரர்களுக்கு பணிபுரிவதில் தங்களை அர்ப்பணித்து, நற்செய்தியின் சான்றுகளாக செயல்பட்டனர் என்று கூறினார்.

காயமடைந்தவர்களின் துன்பகரமான வேளைகளில், அவர்களைக் கைவிடாமல், அவர்களுக்காகப் பணியாற்றிய இந்த இறையடியார்கள், விசுவாசத்திற்காக மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர் என மேலும் உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

31 May 2021, 14:46