தேடுதல்

Vatican News
நாத்சி கொடுமைகளிலிருந்து மீண்டு வந்தவருடன் திருத்தந்தை நாத்சி கொடுமைகளிலிருந்து மீண்டு வந்தவருடன் திருத்தந்தை  (AFP or licensors)

நாத்சி கொடுமைகளிலிருந்து மீண்டு வந்தவருடன் திருத்தந்தை

நான்கு வயதில், தன் தாயுடன் நாத்சி வதைமுகாமுக்கு இழுத்துச் செல்லப்பட்ட Lidia Maksymowicz அவர்கள், தற்போது, தன் 80வது வயதில், நாத்சி தகனக் கொடுமைகளைத் தாண்டி, ஐரோப்பாவில் இன்றும் வாழ்ந்துவரும் வெகு சிலரில், ஒருவர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பெலாருஸ் நாட்டில் பிறந்து, போலந்து நாட்டின் நாத்சி வதைமுகாமில் அடைபட்டு, உயிரோடு வெளியேறிய Lidia Maksymowicz என்ற பெண்மணியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 26, இப்புதனன்று, தான் மறைக்கல்வி உரை வழங்கிய புனித தமாசோ சதுக்கத்தில் சந்தித்தார்.

ஒரு வார்த்தையும் பேசாமல், தானும், திருத்தந்தையும் ஒருவரையொருவர் பார்த்த விதத்திலேயே, தாங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டோம் என்று, Lidia அவர்கள், வத்திக்கான் செய்திக்கு வழங்கிய ஒரு நேர்காணலில் கூறினார்.

"70072" என்ற எண், தன் கரங்களில் பச்சை குத்தப்பட்டிருப்பதை திருத்தந்தையிடம் தான் காண்பித்த வேளையில், அவர், அந்த எண் பொறிக்கப்பட்ட இடத்தை முத்தி செய்தபோது, இவ்வுலகத்துடன் தான் இன்னும் கூடுதலாக ஒப்புரவு பெறுவதற்கு அது உதவி செய்தது என்று, Lidia அவர்கள், எடுத்த்துரைத்தார்.

நான்கு வயதில், தன் தாயுடன் நாத்சி வதைமுகாமுக்கு இழுத்துச் செல்லப்பட்ட Lidia Maksymowicz அவர்கள், தற்போது, தன் 80வது வயதில், நாத்சி தகனக் கொடுமைகளைத் தாண்டி, ஐரோப்பாவில் இன்றும் வாழ்ந்துவரும் வெகு சிலரில், ஒருவர்.

திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்களுக்கு அடுத்தபடியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீது தனக்கு மிகுந்த பற்று உள்ளது என்றும், அவர் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்வுகளையும் தொலைகாட்சி வழியே தான் பின்பற்றுவதாகவும் Lidia அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை தான் சந்தித்த மே 26ம் தேதி, போலந்து நாட்டில் அன்னையின் தினம் என்பதை தன் பேட்டியில் நினைவுகூர்ந்த Lidia அவர்கள், தன்னைப் பெற்று வளர்த்த அன்னை, நாத்சி வதை முகாமுக்குப் பின் தன்னைப் பேணி வளர்த்த அன்னை என்ற இரு அன்னையர், தன் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று கூறினார்.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் உருவம் பதித்த செபமாலையை, தன் பேரன் அருள்பணி Dariusz அவர்கள் ஆசீர்வதித்து தனக்கு வழங்கியதாக கூறிய Lidia அவர்கள், தான் தினமும் பயன்படுத்தும் அந்தச் செபமாலையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கரங்களில் வைத்து, அவரது ஆசீரையும் பெற்றுக்கொண்டதாக தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

27 May 2021, 13:58