தேடுதல்

Galapagosவில் பர்த்தலோமே தீவு Galapagosவில் பர்த்தலோமே தீவு  

நம் பொதுவான இல்லத்தைப் பராமரிப்பது ஒவ்வொருவரின் கடமை

தீவுகளில் வாழ்வோர், மற்றும், பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண்பதெற்கென நடைபெற்ற மெய்நிகர் கூட்டத்தில், ஆங்லிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்களும், Seychelles அரசுத்தலைவர் Wavel Ramkalawan அவர்களும் கலந்துகொண்டனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தீவுகளிலும், தனித்துவிடப்பட்ட பகுதிகளிலும் வாழ்கின்ற மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், மற்றும், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குரிய வாய்ப்புகள்பற்றி ஆராய்வதற்கென, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, மே 21, இவ்வெள்ளியன்று ஏற்பாடு செய்த மெய்நிகர் கூட்டத்திற்கு, செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பிய செய்தியில், நம் பொதுவான இல்லத்தைப் பராமரிப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சி

ஒதுக்கப்பட்ட சூழலில் வாழ்கின்ற மக்கள், குறிப்பாக, இளையோர் எதிர்கொள்ளும் சவால்களை, மத நம்பிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க, இக்கூட்டம் நல்லதொரு வாய்ப்பு என்று, திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.

இந்த பெருந்தொற்று காலத்தில், மக்கள், தங்களின் பலவீனங்கள்பற்றி கூடுதலாக அறிந்துவரும்வேளை, எல்லாநிலைகளிலும் ஒருங்கிணைந்த சூழலியல் தேவைப்படுகின்றது என்பதையும் உணர்ந்துவருகின்றனர் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

கிறிஸ்தவ சபைகள் இணைந்து நடத்தும், முக்கிய கூட்டமாக இது அமைந்துள்ளது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

கூட்டத்தின் நோக்கம் 

திருஅவை, மே 16, கடந்த ஞாயிறு முதல், Laudato Sí வாரத்தை சிறப்பித்துவருவதையொட்டி, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையும், உரோம் மாநகரிலுள்ள ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை மையமும் இணைந்து, “உடன்பிறந்த உணர்வைக் கட்டியெழுப்புதல், நீதியைப் பாதுகாத்தல், தீவுகளில் வாழும் மக்களுக்கு வாய்ப்புகள் மற்றும், சவால்கள்” என்ற தலைப்பில், கிறிஸ்தவ ஒன்றிப்பு நிகழ்வாக, இவ்வெள்ளியன்று இக்கூட்டத்தை நடத்தின.  

தீவுகளிலும், தனித்துவிடப்பட்டுள்ள பகுதிகளிலும் வாழ்கின்ற மக்களோடு ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை, கத்தோலிக்கத் திருஅவையும், ஆங்லிக்கன் சபையும் இணைந்து ஆற்றவுமென இக்கூட்டம் நடத்தப்பட்டது. இணையம் வழியாக நடைபெற்ற இந்த மெய்நிகர் கூட்டத்தில், பழங்குடியின மக்களின் உரிமைகள், இயற்கை வளங்கள் மீது அவர்களுக்கு இருக்கின்ற தன்னாட்சி போன்ற தலைப்புகள் இடம்பெற்றன. மேலும், இக்கூட்டத்தில், பழங்குடியினங்களைச் சேர்ந்த இளையோரும் பங்குபெற்றனர்.

இக்கூட்டத்தில், இங்கிலாந்தின் கான்டர்பரி ஆங்லிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி, Seychelles குடியரசின் அரசுத்தலைவர் Wavel Ramkalawan ஆகியோர் உட்பட, பல முக்கிய நபர்கள் கலந்துகொண்டனர்.

22 May 2021, 15:58