தேடுதல்

‘சுவிஸ் கார்ட்ஸ்’ என்ற அமைப்பில், புதிதாக இணைந்த வீரர்கள் ‘சுவிஸ் கார்ட்ஸ்’ என்ற அமைப்பில், புதிதாக இணைந்த வீரர்கள் 

‘சுவிஸ் கார்ட்ஸ்’ அமைப்பினரை பாராட்டிய திருத்தந்தை

திருத்தந்தையரைக் காக்கும் பணியில், சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள், தங்கள் உயிரையும் வழங்கும் அளவு, உன்னதமான தியாகங்களை செய்துள்ளனர் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றில், திருத்தந்தையரைக் காக்கும் பணியில், சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள், தங்கள் உயிரையும் வழங்கும் அளவு, உன்னதமான தியாகங்களை செய்துள்ளனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ‘சுவிஸ் கார்ட்ஸ்’ என்ற அமைப்பைச் சேர்ந்த மெய்காப்பாளர்களிடம் கூறினார்.

திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களாகப் பணியாற்றும் ‘சுவிஸ் கார்ட்ஸ்’ என்ற அமைப்பில், புதிதாக இணைந்த 34 இளைஞர்களையும், அவர்களது பெற்றோரையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 06, இவ்வியாழன் காலையில், வத்திக்கானின் கிளமெந்தீனா அரங்கத்தில் சந்தித்து, அவர்களுக்கு, தன் வாழ்த்துக்களையும், நன்றியையும் வெளியிட்ட வேளையில், இவ்வாறு கூறினார்.

‘சுவிஸ் கார்ட்ஸ்’ என்ற அமைப்பு, ஓர் இராணுவத்திற்குரிய அம்சகளைக் கொண்டிருக்கும் அதேவேளையில், அது, திருத்தந்தையருக்கும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் தனிப்பட்ட பணிகளை ஆற்றும் ஓரு சேவை நிறுவனமாகவும் செயல்படுகின்றது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

இந்த அமைப்பைச் சார்ந்த சில இளைஞர்கள், அருள்பணித்துவ வாழ்வையும், துறவற வாழ்வையும் தேர்ந்துள்ளனர் என்பதை தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்னும் சிலர், திருமண வாழ்விலும், குடும்பங்களை உருவாக்கும் அழைப்பிலும் ஈடுபடுவது, மகிழ்வைத் தருகிறது என்பதையும் எடுத்துரைத்தார்.

ஓர் இராணுவ வீரருக்குரிய தொழில் திறமையையும், அதே வேளையில், ஆன்மீக பண்புகளையும் ஒருங்கிணைத்து வாழும் ‘சுவிஸ் கார்ட்ஸ்’ என்ற அமைப்பின் இளையோர், வத்திக்கானைக் காணவரும் பயணிகளிடம் மனிதாபிமான உணர்வுடன் நடந்துகொள்வதும் போற்றுதற்குரியது என்று, திருத்தந்தை குறிப்பிட்டுப் பேசினார்.

ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்குமுன், 1527ம் ஆண்டில், உரோம் நகர் சூறையாடப்பட்டபோது, திருத்தந்தை 7ம் கிளமெண்ட் அவர்கள், தன் இல்லத்தைவிட்டுத் தப்பிச்சென்ற வேளையில், அவரது உயிரைக் காப்பதற்காகப் போராடிய 189 சுவிட்சர்லாந்து படைவீரர்களில் 147 பேர் உயிரிழந்தனர்.

இந்தப் படைவீரர்கள் உயிரிழந்த மே 6ம் நாளன்று, ஒவ்வோர் ஆண்டும், வத்திக்கானில், திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களாக இணையும் புதிய சுவிஸ் காவல் வீரர்கள் உறுதிமொழி எடுத்து, பணியில் சேருவது வழக்கம். இவ்வாண்டு, இந்நிகழ்வு, மே 6, இவ்வியாழனன்று நடைபெற்ற வேளையில், 34 இளைஞர்கள் இப்பணியில் இணைந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2021, 14:35