தேடுதல்

மறைக்கல்வி உரையின்போது இறைவேண்டல் செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ் மறைக்கல்வி உரையின்போது இறைவேண்டல் செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ் 

வத்திக்கான் வளாகத்தில் நிகழ்ந்த தாக்குதலின் நினைவு

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் மீது, மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் 40ம் ஆண்டு நிறைவைப்பற்றியும், பாத்திமா அன்னை மரியாவின் திருநாளைப்பற்றியும் மக்களுக்கு நினைவுறுத்திய திருத்தநதை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மே 12, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறைக்கல்வி  உரையின் இறுதியில், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் மீது, மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் 40ம் ஆண்டு நிறைவைப்பற்றியும், பாத்திமா அன்னை மரியாவின் திருநாளைப்பற்றியும் வத்திக்கான் புனித தமாசோ வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு நினைவுறுத்தினார்.

1981ம் ஆண்டு மே 13ம் தேதி, புதனன்று, திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்க, வத்திக்கான புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், மாலை 5.15 மணியளவில் நுழைந்து, மக்களைச் சந்திக்க, தன் வாகனத்தில் வலம் வந்த வேளையில், 5.22 மணிக்கு, Ali Agca என்ற இளைஞரால் சுடப்பட்டார்.

அத்தாக்குதலிலிருந்து தன்னைக் காத்தது, பாத்திமா அன்னை மரியா என்பதை, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார் என்று, இப்புதனன்று குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் கரங்களில் நம்மை ஒப்படைப்பது, அன்னை மரியா என்பதை அனைவரும் உணரவேண்டும் என்று அழைப்புவிடுத்தார்.

திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்களின் உயிரை, 40 ஆண்டுகளுக்கு முன் காப்பாற்றிய அன்னை மரியா, தற்போது, உலக மக்களை கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து காத்தருள வேண்டுமென செபிப்போம் என்று, திருத்தந்தை இப்புதனன்று மக்களைக் கேட்டுக்கொண்டார்.

மேலும், கோவிட்19 பெருந்தொற்றிலிருந்து, இறைவன், இவ்வுலகைக் காக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன், மே மாதம் முழுவதும் அன்னை மரியாவின் திருத்தலங்களில் மேற்கொள்ளப்படும் தொடர் செபமாலை பக்திமுயற்சியின் ஒரு பகுதியாக, மே, 13, இவ்வியாழனன்று, பாத்திமா அன்னை மரியாவின் திருநாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா திருத்தலத்திலிருந்து இந்த செபமாலை பக்தி முயற்சி வழிநடத்தப்படும் என்பதும், மே 14, இவ்வெள்ளியன்று, தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை மரியா திருத்தலத்திலிருந்து இந்த பக்தி முயற்சி வழிநடத்தப்படும் என்பதும், குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 May 2021, 12:00