தேடுதல்

உகாண்டாவில் மறைப்பணி உகாண்டாவில் மறைப்பணி  

திருத்தந்தை பிரான்சிஸ்: மறைக்கல்வி ஆசிரியரின் திருப்பணி

திருமுழுக்குத் திருவருளால், மறைக்கல்விப் பணியில் ஒத்துழைப்பதற்கு தாங்கள் அழைக்கப்பட்டுள்ளதை பொதுநிலையினர் உணரவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்  

அருள்பணியாளர்களின் ஆதிக்கத்தில் வீழ்ந்துவிடாமல், பொதுநிலையினர் பாணியில், இக்காலத்திற்கேற்ப நற்செய்தி அறிவித்தலின் அவசரத்தேவையை உணர்ந்தவராய், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைக்கல்வி ஆசிரியர் திருப்பணி அமைப்பு ஒன்றை மே 11, இச்செவ்வாயன்று உருவாக்கியுள்ளார்.

"Antiquum ministerium" அதாவது, “தொன்றுதொட்டு விளங்கும் திருப்பணி” என்ற தலைப்பில், தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் Motu proprio வடிவிலுள்ள திருத்தூது மடல் வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுநிலையினரின் மறைக்கல்வி திருப்பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

உலகமயமாக்கப்பட்ட ஒருவித கலாச்சாரம் திணிக்கப்பட்டுள்ள இன்றைய உலகில், திருஅவை, தன் மறைப்பணியை மேற்கொள்ள, கடந்தகாலத்திற்குப் பிரமாணிக்கம், மற்றும், நிகழ்காலத்திற்குப் பொறுப்பு ஆகிய இரண்டும், இன்றியமையாத நிபந்தனைகளாக உள்ளன என்று, திருத்தந்தை கூறியுள்ளார்.

உண்மையில், பொதுநிலையினர், தங்களின் திருமுழுக்கால், மறைக்கல்விப் பணியில் ஒத்துழைப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்பது உணரப்படவேண்டும், மற்றும், அந்த உணர்வு அங்கீகரிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இளம் தலைமுறையினரோடு உண்மையான சந்திப்பு நிகழ்த்தவேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல், திருஅவையின் காலத்திற்கேற்ற மறைப்பணியோடு ஒத்திணங்கும் முறையில், நற்செய்தியை அறிவிப்பதற்கு, செயல்முறைகள், மற்றும், படைப்பாற்றல்மிக்க கருவிகள் ஆகியவையும் தேவைப்படுகின்றன என்றும், திருத்தந்தை, தன் Motu proprio மடலில் கூறியுள்ளார்.

புதிய திருப்பணியும், கிறிஸ்தவத்தின் துவக்க காலமும்

துவக்க காலத்திலிருந்தே, கிறிஸ்தவ சமுதாயம், பல்வேறு வடிவங்களில், தூய ஆவியாரின் பணிகளுக்குக் கீழ்ப்படிந்து, திருஅவையின் வாழ்வைக் கட்டியெழுப்பதற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டுக்களை, லூக்கா நற்செய்தியிலும் (லூக்.1:3-4), திருத்தூதரான புனித பவுல், கொரிந்தியருக்கும் (1கொரி.12:28-31), கலாத்தியருக்கும் (கலா.6:6) எழுதிய திருமடல்களிலும் நாம் காணலாம் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

இவ்வாறு, தற்போது பொதுநிலையினரின் மறைக்கல்வி புதிய திருப்பணி, கிறிஸ்தவத்தின் பழங்காலத்தில் தன் அடித்தளத்தைக் கொண்டிருக்கின்றது என்றும், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட நற்செய்தி அறிவிப்புப்பணியின் வரலாற்றைப் பார்க்கும்போது, அதில் மறைக்கல்வி ஆசிரியர்களின் பணி எவ்வளவு சாரமுடையதாக இருக்கின்றது என்பதை, மிகுந்த சான்றுகளுடன் காணமுடிகின்றது என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மறைக்கல்வி ஆசிரியர்கள், தங்கள் உயிரையே அளிக்கும் அளவுக்கு, நற்செய்தி அறிவிப்புப்பணியை ஆற்றியுள்ளனர் என்றும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கமும், மறைக்கல்வி ஆசிரியர்களின் மறைப்பணியின் முக்கியத்துவத்தை அதிகமதிகமாய் உணர்ந்தது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

கிறிஸ்தவ விழுமியங்கள் வழியாக சமுதாயத்தை மாற்றுதல்

தன் மறைமாவட்டத்தில், முதன்மை மறைக்கல்வி ஆசிரியர், ஆயர் என்பதும், தங்களின் பிள்ளைகளை கிறிஸ்தவத்தில் உருவாக்குவதற்கு பெற்றோருக்கு சிறப்பு கடமை உள்ளது என்பதும், எந்த வகையிலும் குறைக்கப்படக் கூடாது என்று கூறியுள்ள திருத்தந்தை, பொதுநிலை ஆண்களும், பெண்களும், தங்களின் திருமுழுக்கு அருளால், மறைக்கல்விப் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளதை உணருமாறும் கூறியுள்ளார்.

சமுதாய, அரசியல், மற்றும், பொருளாதார உலகில், கிறிஸ்தவ விழுமியங்களைப் புகுத்துவதன் வழியாக, சமுதாயத்தின் மாற்றத்திற்கு, பொதுநிலையினரின் மறைப்பணிகள் உதவமுடியும் என்பதை, மேய்ப்பர்கள் ஏற்கவேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அருள்பணித்துவ ஆதிக்க உணர்வு தவிர்க்கப்பட

பொதுநிலையினரின் திருத்தூதுப்பணி, அவர்களின் தினசரி வாழ்வோடு தொடர்புடையது, அதேநேரம், திருஅவைக்காகப் போதிக்கும் மறைக்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியராக, உடன்பயணிப்பவராக, கிறிஸ்தவ நம்பிக்கைக்குச் சான்று பகர்கின்றவர்களாக வாழவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, இதனை, இறைவேண்டல், ஆய்வு, மற்றும், சமுதாய வாழ்வில் நேரடித்தொடர்பு ஆகியவை வழியாக அடையமுடியும் என்று கூறியுள்ளார்.

மறைக்கல்வி ஆசிரியர்களின் திருத்தூதுப்பணி, அருள்பணித்துவத்தின் ஆதிக்கத்தில் வீழ்ந்துவிடாமல், முற்றிலும் பொதுநிலையினரின் முறையில் இடம்பெறவேண்டும் என்று திருத்தந்தை பரிந்துரைத்துள்ளார்.

திருவழிபாட்டுப் பேராயம்

பொதுநிலையினரின் மறைக்கல்விப்பணி, தலத்திருஅவைக்கு வழங்கப்படும் நிலையான பணி என்பதால், அது வலுவான மதிப்பைக்கொண்டிருக்கின்றது என்றும், தலஆயரின் முறையான தெளிந்துதேர்தல் இதற்குத் தேவைப்படுகின்றது என்றும், மறைக்கல்வி திருப்பணி அமைப்பு குறித்த விதிமுறைகளை, திருவழிபாட்டுப் பேராயம் விரைவில் வெளியிடும் என்றும், திருத்தந்தை தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

இருபால் மறைக்கல்வி ஆசிரியர்கள், ஆழமான நம்பிக்கை மற்றும், பக்குவமடைந்த மனிதர்களாகவும், உடன்பிறந்த உணர்வோடு, மனத்தாராளத்துடன், கிறிஸ்தவ சமுதாயத்தை வரவேற்று, அவர்களின் வாழ்வில் உயிர்த்துடிப்புடன் பங்குகொள்கின்றவர்களாகவும், திருவிவிலியம், இறையியல், மேய்ப்புப்பணி, மற்றும், போதனைமுறை ஆகியவற்றில் பயிற்சிபெற்றவர்களாகவும், அருள்பணியாளர்கள் மற்றும், திருத்தொண்டர்களோடு பிரமாணிக்கத்துடன் ஒத்துழைப்பவர்களாகவும், உண்மையான திருத்தூது ஆர்வத்தால் தூண்டப்பட்டவர்களாகவும் இருக்கவேண்டும் என்று, அம்மடலில் திருத்தந்தை கூறியுள்ளார்.

ஆயர் பேரவைகளுக்கு அழைப்பு

இறுதியாக, மறைக்கல்வி ஆசிரியர்களின் திருப்பணியைப் பலனுள்ளதாக்குவதற்கு, ஆயர் பேரவைகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளிலும், அவற்றின் குறிப்பிட்ட சட்டத்தின்கீழ், இந்த திருப்பணி அமைப்பு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

அருள்பணியாளரும், திருஅவையின் மறைவல்லுனருமாகிய, அவிலா நகர் புனித யோவானின் திருநாளாகிய, மே 10, இத்திங்களன்று, திருத்தந்தை கையெழுத்திட்டுள்ள “Antiquum ministerium” Motu proprio மடலை, புதியவழி நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பீட அவை, மே 11, இச்செவ்வாயன்று, வெளியிட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 May 2021, 14:53