தேடுதல்

Vatican News
மியான்மார் அமைதிக்கு விண்ணப்பம் மியான்மார் அமைதிக்கு விண்ணப்பம் 

மியான்மார் அமைதிக்காக செபமாலை வழியாக செபிக்க

மே 2ம் தேதி, உயிர்ப்புப் பெருவிழாவைச் சிறப்பித்த ஆர்த்தடாக்ஸ், மற்றும் ஏனைய கிறிஸ்தவ சபைகளுக்கு திருத்தந்தை வாழ்த்து

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

அன்னைமரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தில், ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு மரியன்னை திருத்தலங்களில் உலக கத்தோலிக்கர் இணைந்து செபமாலை செபிக்கும் திட்டத்தை மே மாதம் முதல் தேதி, சனிக்கிழமையன்று புனித பேதுரு பேராலயத்திலிருந்து துவக்கி வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மியான்மார் நாட்டின் அமைதிக்காக செபமாலை வழியாக செபிக்க வேண்டுமென, ஞாயிறு 'வானக அரசியே' வாழ்த்தொலி உரைக்குப்பின் விண்ணப்பித்தார்.

ஒவ்வொரு திருத்தலத்திலிருந்தும் செபமாலை செபிக்கும் திட்டம் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், மியான்மார் திருஅவைக்காக நம் தினசரி செபமாலையில் ஓர் அருள் நிறை மாரியே செபத்தை அர்ப்பணிப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

துன்பகரமான வேளைகளில் வழக்கமாக அன்னையை நோக்கித் திரும்பும் நாம், மியான்மார் நாட்டுத் தலைவர்கள், கலந்துரையாடல், ஒப்புரவு, மற்றும் அமைதியின் பாதையில் நடைபோட உதவுமாறு நம் அன்னை மரியாவை நோக்கி வேண்டுவோமென விண்ணப்பித்தார்.

மேலும், ஏப்ரல் 30, கடந்த வெள்ளியன்று, இஸ்ரயேலின் Mount Meron பகுதியில் B’Omer மதக்கொண்டாட்டத்தில் இடம்பெற்ற நெரிசலில் 45 பேர் உயிரிழந்தது, மற்றும் பலர் காயமடைந்து குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிரிழந்தவர்கள், மற்றும், அவர்களின் குடும்பங்களுக்காக தன் செப உறுதியையும் வழங்கினார்.

அத்துடன், வெனிசுவேலாவின் Caracas நகரில், அறிவியல் மற்றும் விசுவாசத்தால் நிரப்பப்பட்டவராக, ஏழைகளின் முகங்களில் இயேசுவைக் கண்டு பணியாற்றிய இறையடியார், மருத்துவர் José Gregorio Hernández Cisneros அவர்கள், ஏப்ரல் 30ம் தேதி, வெள்ளியன்று, அருளாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்தும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலியன் நாட்காட்டியைப் பின்பற்றி மே 2ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று இயேசு உயிர்ப்பு பெருவிழாவைச் சிறப்பித்த ஆர்த்தடாக்ஸ், மற்றும் ஏனைய கிறிஸ்தவ சபைகளுக்கு தன் வாழ்த்துக்களையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்

 

02 May 2021, 16:40