தேடுதல்

புலம்பெயர்ந்தோருடன், திருத்தந்தையின் தர்மப்பணிகளுக்குப் பொறுப்பாக பணியாற்றும், கர்தினால் Konrad Krajewski புலம்பெயர்ந்தோருடன், திருத்தந்தையின் தர்மப்பணிகளுக்குப் பொறுப்பாக பணியாற்றும், கர்தினால் Konrad Krajewski 

கோயம்பத்தூர் சாந்தி ஆஸ்ரமத்திற்கு, திருத்தந்தையின் நிதியுதவி

உணவு வங்கி, மருத்துவ வசதிகள், பயிற்சி மையங்கள் வழியாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவி வரும் சாந்தி ஆஸ்ரமத்திற்கான நிதி திரட்டலில், திருத்தந்தையும் தன் பங்களிப்பை வழங்கியுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தமிழகத்திலிருந்து செயல்படும் பெண்கள் நல பராமரிப்பு மையம் ஒன்றிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிதியுதவி வழங்கி, ஊக்கமளித்துள்ளார்.

வளர்ச்சி, கற்றுக்கொள்ளல், மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்வண்ணம், தமிழகத்தின் கோயம்பத்தூரிலிருந்து இயங்கும் 'சாந்தி ஆஸ்ரம்' எனும் அனைத்துலக மையத்திற்கு உதவும் நோக்கத்தில், அனைத்துலக புகழ்வாய்ந்த மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் குழந்தை மருத்துவர்கள் இணைந்து நடத்திய இணையவழி நிதி திரட்டல் கருத்தரங்கின் இறுதியில், திருத்தந்தையின் தர்மப்பணிகளுக்குப் பொறுப்பாக பணியாற்றும், கர்தினால் Konrad Krajewski. அவர்கள், திருத்தந்தையின் பெயரால், இந்த நிதியுதவியை அறிவித்துள்ளார்

இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டபோது, கோயம்பத்தூரில் சாந்தி ஆஸ்ரம் ஆற்றும் சேவைகளை நேரடியாகக் கண்டுவந்த உரோம் நகர் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் மகப்பேறு மருத்துவர், Antonia Testa என்பவர், பெண் தொழில்கலைஞர்களுக்கு பயிற்சியையும் மருத்துவ உதவிகளையும், கிராமத்திலுள்ள 50 ஆயிரம் குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளையும் ஆற்றிவரும் இந்த மையத்திற்கு, இந்த கோவிட் காலத்தில் உதவும்பொருட்டு இணைய வழி நிதி திரட்டல் ஒன்றை துவக்கினார்.

உலகிலுள்ள பிரபல மகப்பேறு, மற்றும் குழந்தைநல மருத்துவர்களின் உதவியுடன், 60,000 யூரோக்கள் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டு துவக்கப்பட்ட இணையவழி நிதி திரட்டல் திட்டம், தங்கள் முயற்சியின் இறுதியில் 40,000 யூரோக்களையே திரட்டியிருந்த நிலையில், கடைசி நேரத்தில், யாரும் ஏதிர்பாராதவிதமாக மீதியுள்ள 20 ஆயிரம் யூரோக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

உணவு வங்கி, மருத்துவ வசதிகள், பயிற்சி மையங்கள் வழியாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவி வரும் சாந்தி ஆஸ்ரமத்திற்கான நிதி திரட்டலில், இந்த கோவிட் காலத்தில், திருத்தந்தையும் தன் பங்களிப்பை தருவதாக, திருத்தந்தையின் பிறரன்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருக்கும் கர்தினால் Krajewski அவர்கள் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 May 2021, 15:13