தேடுதல்

Mottarone  cable car  விபத்து Mottarone cable car விபத்து  (ANSA)

Cable car விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்

மே 23, இஞ்ஞாயிறன்று, Mottarone மலையில், cable car ஒன்று, தொழில்நுட்பக் கோளாறால், 65 அடி உயரத்திலிருந்து விழுந்ததில், அதில் பயணம் மேற்கொண்டவர்களில், சிறுபிள்ளைகள் உட்பட, 14 பேர் உயிரிழந்தனர்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வட இத்தாலியின் Lago Maggiore எனப்படும் பெரிய ஏரிக்கு அருகிலுள்ள Mottarone மலையில் cable car ஒன்று, விபத்துக்குள்ளாகியதில், அதில் இறந்தவர்களுக்குச் செபம் மற்றும், அவர்களின் குடும்பங்களுக்கு தனது அருகாமையைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 23, இஞ்ஞாயிறன்று, Mottarone மலையில், cable car  ஒன்று, தொழில்நுட்பக் கோளாறால், 65 அடி உயரத்திலிருந்து விழுந்ததில், அதில் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகளில், சிறுபிள்ளைகள் உட்பட, 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த கடுந்துயரை முன்னிட்டு, நொவாரா மறைமாவட்ட ஆயர் Franco Giulio Brambilla அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரால் அனுப்பிய தந்திச் செய்தியில், இவ்விபத்து குறித்து, திருத்தந்தை மிகுந்த கவலையடைந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Cable car வாகனத்தில் சென்ற சுற்றுலாப் பயணிகள், படைப்பின் அழகைக்கண்டு வியந்து அதில் மூழ்கியிருந்த நேரத்தில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று கவலை தெரிவித்துள்ள திருத்தந்தை, இந்த விபத்தால் ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் மக்களுக்கு, ஆண்டவர் ஆறுதலளிக்குமாறு, தான் செபிப்பதாகக் கூறியுள்ளார்.  

இந்த விபத்தில் இஸ்ரேல் குடும்பம் ஒன்றின் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் உயிர் பிழைத்துள்ள, இத்தாலியின் பவியா என்ற நகரில் வாழ்கின்ற இஸ்ரேல் தம்பதியரின் 5 வயது நிரம்பிய சிறுவன் Eitan, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறான்.

இத்தாலிய அரசுத்தலைவர் Sergio Mattarella, இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu உட்பட, பலரும் இந்த விபத்து குறித்த தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.

இத்தாலிய ஆயர் பேரவையின் 74வது கூட்டம்

மேலும், மே 24 இத்திங்களன்று, உரோம் மாநகரில், இத்தாலிய ஆயர்களின் 74வது பொதுப் பேரவையை, உரோம் மறைமாவட்டத்தின் ஆயராகிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கி வைத்துள்ளார்.

மே 27, வருகிற வியாழன் வரை நடைபெறும் இப்பேரவையில், 200க்கும் மேற்பட்ட ஆயர்கள் பங்குபெற்று வருகின்றனர். இப்பேரவையில், அருள்பணித்துவ பயிற்சி கல்லூரிகள், திருஅவை நீதிமன்றங்கள், ஆயர் மன்றங்கள் ஆகிய தலைப்புக்களில், இத்தாலிய ஆயர்களின் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெறுகின்றன. 

25 May 2021, 15:31