தேடுதல்

Vatican News
செபமாலை செபிக்கும் திருத்தந்தை செபமாலை செபிக்கும் திருத்தந்தை  (ANSA)

சமுதாய இயல்பு நிலை திரும்ப செபமாலை

அன்னை மரியா திருத்தலங்களிலிருந்து இடம்பெறும் செபமாலை இறைவேண்டலில், அனைவரும் கலந்து கொள்ள விண்ணப்பம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கோவிட் பெருந்தொற்று முடிவுக்கு வருதல், சமுதாய இயல்பு நிலை திரும்புதல் ஆகிய வேண்டுதல்களுடன், உலகின் முக்கிய 30 திருத்தலங்களில், ஒவ்வொரு நாளும் இணையம் வழியே விசுவாசிகளின் பங்கேற்கும் செபமாலை பக்திமுயற்சி, மே 5, இப்புதன்கிழமையன்று, தென் கொரியாவின் Namyang செபமாலை அன்னை திருத்தலத்திலிருந்து இடம்பெறுகிறது என்பதை குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

குழந்தைகளுக்கும், சிறார்களுக்கும் என்ற மையக்கருத்துடன், தென் கொரிய அன்னை மரியா திருத்தலத்திலிருந்து இடம்பெறும் இந்த செபமாலை இறைவேண்டலில், அனைவரும் கலந்து கொள்ளுமாறு விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இத்தாலியத் திருப்பயணிகளுக்கு என ஒரு விண்ணப்பத்தை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 8ம் தேதி, சனிக்கிழமையன்று, இத்தாலியின் Pompei திருத்தலத்திலிருந்து, உள்ளூர் நேரம் நண்பகலில் இப்பக்தி முயற்சி இடம்பெறுவதை நினைவூட்டி, அதில் ஆன்மீக முறையில் அனைவரும் இணையுமாறு அழைப்பு விடுத்தார்.

உலகம் முழுவதும் இருந்து 30 திருத்தலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் ஒரு திருத்தலத்திலிருந்து, வத்திக்கான் தகவல் தொடர்பு துறை இணைப்புடன், செபமாலை செபிக்கும் இந்த மே மாதத் திட்டத்தில், 14ம் தேதி, தமிழகத்தின் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலம் கலந்துகொள்கிறது.

இந்த அழைப்பிற்கு பின்னர், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

05 May 2021, 12:34