தேடுதல்

Vatican News
Sheshan திருத்தலத்தில் இறைவேண்டல் Sheshan திருத்தலத்தில் இறைவேண்டல் 

சீனக் கத்தோலிக்கர்களுடன் இணைந்து இறைவேண்டல் செய்வோம்

சீனாவின் கத்தோலிக்கர்கள் அனைவரும் நாட்டில் நீதி மற்றும் அமைதியைக் கட்டியெழுப்புபவர்களாகச் செயல்பட தூய ஆவியார் உதவுவாராக

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

Sheshan அன்னை மரியாவின் திருவிழாவைக் கொண்டாட சீனக் கத்தோலிக்கர்கள் தங்களைத் தயாரித்துவரும் வேளையில், அவர்களோடு உலக கத்தோலிக்கர்கள் அனைவரும் இணைந்து இறைவேண்டல் செய்யுமாறு அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறன்று வழங்கிய வானக அரசியே வாழ்த்தொலி உரைக்குப்பின் இந்த அழைப்பை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவரின் தாய், மற்றும் திருஅவையின் தாய் மீது அளவற்ற பக்திக் கொண்டுள்ள சீன கத்தோலிக்கர்கள், தங்கள் தினசரி வாழ்வின் துன்ப வேளைகளிலும், நம்பிக்கை நேரங்களிலும், அன்னை மரியாவின் அடைக்கலத்தில் தங்களை ஒப்படைக்கின்றனர் என்று கூறினார்.

சீனாவின் கத்தோலிக்கர்கள் அனைவரும் மகிழ்வுச் செய்தியை தாங்கிச் செல்பவர்களாக, நன்மைத்தனம், மற்றும் பிறரன்பின் சான்றுகளாக, நாட்டில் நீதி மற்றும் அமைதியைக் கட்டியெழுப்புபவர்களாகச் செயல்பட தூய ஆவியார் உதவுவாராக என அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 24ம் தேதி கொண்டாடப்படும் மரியன்னை திருவிழாவன்று, அனைத்துலக கத்தோலிக்கர்களும், சீனக் கத்தோலிக்கர்களுடன் தங்கள் இறைவேண்டலை இணைக்கவேண்டும் என அழைப்புவிடுத்தார்.

மேலும், கொலம்பியாவில் துன்புறும் மக்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறு மீண்டுமொருமுறை அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏற்கனவே, இம்மாதத்தில், கொலம்பியா நாட்டிற்காக செபிக்குமாறு ஞாயிறு வாழ்த்தொலி உரைக்குப்பின் அழைப்பு விடுத்திருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று, அதனை, மீண்டும் விடுத்தார்.

பல்வேறு துன்பங்களை அனுபவித்துவரும் கொலம்பியா மக்களுக்காக, குறிப்பாக, இந்த கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் துன்புறும் ஏழைமக்களுக்காக, நீதியான தீர்வைக்காண உதவும் உரையாடல்களுக்குரிய வரத்தை தூய ஆவியார் வழங்க வேண்டுமென செபிப்பதாக உரைத்தார்.

23 May 2021, 12:30