தேடுதல்

Vatican News
Luján அன்னை மரியா Luján அன்னை மரியா  (Vatican Media)

அர்ஜென்டீனாவுக்கு Lujan அன்னை மரியா ஆற்றிய அற்புதங்கள்

மே 7, இவ்வெள்ளியன்று, பிலிப்பீன்சின், Antipolo பேராலயத்தில், அமைதி, மற்றும், நல் பயணத்தின் அன்னை மரியாவிடம், உலகின் அனைத்துக் குடும்பங்களுக்காக, செபமாலை செபிக்கப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அர்ஜென்டீனா நாட்டில், கோவிட்-19 பெருந்தொற்று ஒழிவதற்கும், நாட்டு மக்கள் நலமுடன் வாழ்வதற்கும், செபமாலை பக்திமுயற்சியை மேற்கொள்ளும் அந்நாட்டு ஆயர்களோடு தன் அருகாமையைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 8, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்படும் அர்ஜென்டீனா நாட்டுப் பாதுகாவலராகிய Lujan அன்னை மரியா விழாவை முன்னிட்டு, மாலை திருப்புகழ்மாலை நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அனுப்பியுள்ள ஒளிவலைக்காட்சி செய்தியில், மரியாவுக்கென அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தில், 8ம் தேதியை தான் எதிர்பார்த்திருப்பதாக,  திருத்தந்தை கூறியுள்ளார்.

மே 8, இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம், பகல் ஒரு மணிக்கு, Luján அன்னை மரியா பெருங்கோவிலில் நடைபெறும் செபமாலை பக்திமுயற்சியில் இணையும் ஆயர்களோடு தானும் ஆன்மீக அளவில் ஒன்றித்திருப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை, நம் அன்னை மரியா, நாட்டிற்கு ஆற்றிய நன்மைகளையும், பாதுகாப்பான வருங்காலத்திற்கு உறுதிகூறுவதையும், நினைவுகூரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Luján அன்னை மரியா பெருங்கோவிலில், இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 7 மணிக்கு, ஆயர்கள் திருப்பலி நிறைவேற்றியபின், அந்த அன்னை மரியா திருவுருவத்தின் மேல்போர்வை மாற்றப்படும் நிகழ்வு நடைபெறுகின்றது.

தன் ஒளிவலைக்காட்சி செய்தியில், அந்நிகழ்வை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, அந்த அன்னை மரியாவால் அற்புதம் நடைபெற்ற நானூறாம் ஆண்டு நிறைவு 2030ம் ஆண்டில், இடம்பெறுகின்றது என்றும், அதற்கு தயாரிப்பாக, ஆயர்கள் நவநாள் பக்தி முயற்சியை துவங்கவிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அர்ஜென்டீனா நாட்டில், Luján அன்னை மரியா பக்தி, 1630ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது.

உலகமெங்கும் கோவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்திற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின்பேரில், இந்த மே மாதத்தில் உலகின் முப்பது அன்னை மரியா திருத்தலங்களில், செபமாலை பக்திமுயற்சி நடைபெற்று வருகிறது. Luján அன்னை மரியா பெருங்கோவிலில், மே 8, இச்சனிக்கிழமையன்று, ஊடகத்துறையில் பணியாற்றும் அனைவருக்காகவும்   செபமாலை செபிக்கப்படுகின்றது.

மே 7, இவ்வெள்ளியன்று, பிலிப்பீன்சின், Antipolo பேராலயத்தில், அமைதி, மற்றும், நல் பயணத்தின் அன்னை மரியாவிடம், உலகின் அனைத்துக் குடும்பங்களுக்காக, செபமாலை செபிக்கப்படுகின்றது.

மே 14ம் தேதி, தமிழகத்தின் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில், அனைத்து அறிவியலாளர்கள், மற்றும், மருத்துவ ஆய்வு நிறுவனங்களுக்காக, செபமாலை செபிக்கப்படும்.

07 May 2021, 14:59