தேடுதல்

'இக்னேசியஸ் 500' - வலைத்தளம் வழியே செபநிகழ்வு 'இக்னேசியஸ் 500' - வலைத்தளம் வழியே செபநிகழ்வு 

இக்னேசியஸ் 500 சிறப்பு ஆண்டு - திருத்தந்தையின் ஆசியுரை

மனமாற்றம் என்பது, ஒரே ஒருமுறை மட்டுமே நிகழ்வது அல்ல, மாறாக, அது, ஒவ்வொருநாளும் நிகழ்வது - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித இக்னேசியஸ் வாழ்வாலும், அவரது ஆன்மீகத்தாலும் தூண்டப்பட்ட அனைவரும், தற்போது துவங்கியுள்ள இக்னேசியஸ் ஆண்டில், மனமாற்றம் என்ற மேன்மையான அனுபவத்தைப் பெற நான் வாழ்த்துகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று நிகழ்ந்த வலைத்தள ஒளிபரப்பு ஒன்றில் கூறினார்.

மே 20ம் தேதி முதல் சிறப்பிக்கப்படும் 'இக்னேசியஸ் 500' என்ற ஆண்டிற்கென, உலகளாவிய இயேசு சபையினரும், உடன் உழைப்பாளர்களும் இணைந்து, மே 23, தூய ஆவியார் வருகைப்பெருவிழா ஞாயிறன்று, வலைத்தளம் வழியே மேற்கொண்ட ஒரு செபநிகழ்வில் கலந்துகொண்ட திருத்தந்தை, இறுதியில் வழங்கிய ஆசி உரையில் இவ்வாறு கூறினார்.

கனவுகளை சிதைத்த பீரங்கி குண்டு

500 ஆண்டுகளுக்கு முன், ஒரு பீரங்கி குண்டு, இக்னேசியஸ் அவர்களின் காலை மட்டுமல்ல, அவர் கண்டிருந்த அனைத்து கனவுகளையும் சிதைத்து, அவரது வாழ்வையும், இவ்வுலகையும் மாற்றி அமைத்தது என்பதை, தன் ஆசியுரையின் துவக்கத்தில் திருத்தந்தை கூறினார்.

சிறு விடயங்கள் பெரும் மாற்றங்களைக் கொணரும் என்பதற்கு, அந்த ஒரு பீரங்கி குண்டு எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்னேசியஸ் தனக்கென கண்டிருந்த கனவுகளையெல்லாம் விட, மாபெரும் கனவை, இறைவன், இக்னேசியசுக்காகக் கண்டிருந்தார் என்று கூறினார்.

மனமாற்றம் - ஒவ்வொருநாள் நிகழ்வு

மனமாற்றம் என்பது, ஒரே ஒருமுறை மட்டுமே நிகழ்வது அல்ல, மாறாக, அது, ஒவ்வொருநாளும் நிகழ்வது என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, பாம்பலோனாவில் துவங்கிய மனமாற்ற முயற்சி, இக்னேசியஸ் வாழ்வில் ஒவ்வொரு நாளும், அவர் மேற்கொண்ட தெளிந்து தேர்தல் வழியே தொடர்ந்தது என்று குறிப்பிட்டார்.

தெளிந்து தேர்தல் என்பது, துவக்கத்திலிருந்தே வெற்றிபெறுவதில் அடங்கியிருப்பதல்ல என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழவுப்பாதையில் வரும் ஒவ்வொரு நெளிவு, சுளிவிலும் தூய ஆவியாரின் வழிநடத்துதலைத் தேடுவதில் இது அடங்கியுள்ளது என்று கூறினார்.

திசைக்காட்டிகளாக விளங்க...

இக்னேசியஸ் இவ்வுலகில் மேற்கொண்ட திருப்பயணத்தில் அவர் சந்தித்த மற்றவர்கள், அவரது திசையை மாற்றியமைத்து, அவரை, மீண்டும், மீண்டும் மனமாற்றம் பெறுவதற்கு அழைத்ததுபோல், நாம் இவ்வுலகில் மேற்கொள்ளும் திருப்பயணத்தில், சந்திக்கும் மற்றவர்களும், நம் பயணத்தை மாற்றுகின்றனர் என்றும், நாம் மற்றவர்களின் பயணத்தில் திசைக்காட்டிகளாக விளங்க அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.

இந்த வாழ்வு பயணத்தில், கடவுளோடு, அயலவரோடு, இவ்வுலகோடு நாம் மேற்கொள்ளும் உரையாடல்கள் வழியே, மனமாற்றம் பெறுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இக்னேசியஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்,  அவரது ஆன்மீகத்தால் உந்தப்பட்டவர்கள், அனைவரும் இந்த 500ம் ஆண்டு பயணத்தை சிறப்புற மேற்கொள்ளவும், இன்னும், இந்த ஆன்மீகத்தில் பொதிந்துள்ள கருவூலங்களை இவ்வுலகினர் பலரும் இவ்வாண்டில் கண்டுகொள்ளவும் தான் இறைவேண்டல் புரிவதாகக் கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஆசியுரையை நிறைவு செய்தார்.

மணிலா, உரோம், நியூ யார்க் நகரங்களிலிருந்து...

'இக்னேசியஸ் 500' என்ற சிறப்பு ஆண்டின் துவக்க நிகழ்வுகளில் ஒன்றாக, உலகளாவிய இயேசு சபையினரும், உடன் உழைப்பாளர்களும் இணைந்து, மே 23, தூய ஆவியார் வருகைப்பெருவிழா ஞாயிறன்று வலைத்தளம் வழியே மேற்கொண்ட ஒரு செப நிகழ்வு, பிலிப்பீன்ஸ் நாட்டின் மணிலா, இத்தாலி நாட்டின் உரோம், அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ யார்க் ஆகிய நகரங்களிலிருந்து, ஒவ்வோர் நகரத்தின் உள்ளூர் நேரம் மாலை 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

1521ம் ஆண்டு, பாம்பலோனா கோட்டையைக் காக்க, இளம் வீரர் இக்னேசியஸ், போரில் ஈடுபட்டிருந்த வேளையில், மே 20ம் தேதி, அவரது காலை பீரங்கி குண்டு தாக்கியது. அந்நிகழ்வு, இக்னேசியஸ் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொணர்ந்ததால், அந்நிகழ்வின் 500ம் ஆண்டு தற்போது சிறப்பிக்கப்படுகிறது.

மே 20ம் தேதி, கடந்த வியாழனன்று, பாம்பலோனா பேராலயத்தில் நிகழ்ந்த சிறப்புத் திருப்பலியுடன் துவங்கிய "இக்னேசியஸ் 500" என்ற சிறப்பு ஆண்டு, 14 மாதங்கள் நடைபெற்று, 2022ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி, புனித இக்னேசியஸ் திருநாளன்று நிறைவு பெறும்.

24 May 2021, 14:50