தேடுதல்

சேலம் மறைமாவட்டத்தின் புதிய  ஆயர் அருள்செல்வம் இராயப்பன் சேலம் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் அருள்செல்வம் இராயப்பன்  

சேலம் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்

கடந்த ஓராண்டிற்கு மேலாக ஆயர் இன்றி இருந்த சேலம் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயராக, அருள்பணி அருள்செல்வம் இராயப்பன் நியமனம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தமிழகத்தின் சேலம் மறைமாவட்டத்தின் புதிய  ஆயராக, பாண்டிச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட அருள்பணி அருள்செல்வம் இராயப்பன் அவர்களை, மே 31, இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.

பெங்களூருவின் புனித பேதுரு குருத்துவக் கல்லூரியில், திருஅவை சட்டங்கள் துறையின் இயக்குநராகப் பணியாற்றிவரும் அருள்பணி அருள்செல்வம் அவர்கள், பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் நீதி சார்ந்த விவகாரங்களில் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

1960ம் ஆண்டு, நவம்பர் மாதம் 18ம் தேதி, பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பண்ருட்டிக்கு அருகேயுள்ள Sathipattu எனுமிடத்தில் பிறந்த அருள்பணி அருள்செல்வம் அவர்கள், 1986ம் ஆண்டு, அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டு, பல்வேறு பங்குத்தளங்களில் பணியாற்றியபின், 1992 முதல், 94 வரை, உரோம் நகரின் உர்பான் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பை மேற்கொண்டார்.

1994ம் ஆண்டு பெங்களூரு புனித பேதுரு கல்லூரியின் விரிவுரையாளராக பணியைத் துவக்கிய அருள்பணி அருள்செல்வம் அவர்கள், இதுவரை அக்குருத்துவக் கல்லூரியில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.

2020ம் ஆண்டு மார்ச் மாதம், முன்னாள் ஆயர் சிங்கராயன் செபஸ்தியானப்பன் தன் 67ம் வயதில் பதவிவிலகியதைத் தொடர்ந்து, கடந்த ஓராண்டிற்கு மேலாக, ஆயர் இன்றி இருந்த சேலம் மறைமாவட்டத்திற்கு அருள்பணி அருள்செல்வம் அவர்களை, புதிய ஆயராக அறிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

31 May 2021, 14:35