தேடுதல்

Vatican News
திருத்தந்தை, ஜான் கெர்ரி சந்திப்பு திருத்தந்தை, ஜான் கெர்ரி சந்திப்பு  (AFP or licensors)

திருத்தந்தை, ஜான் கெர்ரி சந்திப்பு

உலகம் வெப்பமடைதலை 1.5 செல்சியுஸ் டிகிரிக்கு கொண்டுவரவேண்டுமெனில், வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்க, அனைத்து நாடுகளும், உடனடியாகச் செயல்படவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் முயற்சியில், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்களின் சிறப்பு பிரதிநிதியாகப் பணியாற்றும், ஜான் கெர்ரி (John Kerry) அவர்கள், மே 15, இச்சனிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

அதற்கு முன்னதாக, மே 14, இவ்வெள்ளியன்று, திருத்தந்தையின் அறிவியல் கழகமும் திருத்தந்தையின் சமுதாய அறிவியல் கழகமும், வத்திக்கானில் நடத்திய கூட்டத்தில், ஜான் கெர்ரி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

“சிறந்ததொரு நிலையை மீண்டும் தொடங்க கனவு காணுதல்” என்ற தலைப்பில், திருத்தந்தையின் இந்த கழகங்கள் நடத்திய கூட்டத்தில், தற்போது உலக அளவில் நிலவும் பிரச்சனை மற்றும், குழப்பத்திற்கு, தன்னலம், புறக்கணிப்புக் கலாச்சாரம் மற்றும், தனிமைப்படுத்துதல் ஆகியவை உலகமயமாக்கப்பட்டதே காரணம் என்று கூறப்பட்டது.

இவை, சமத்துவமின்மை, மற்றும், பசிக்கொடுமையை அதிகரித்து, நன்னெறி, பொருளாதாரம், மற்றும், அரசியல் ஆகியவற்றில் பெரும் சவால்களை முன்வைத்துள்ளன என்றும், கொள்கை அமைப்பாளர்கள், மற்றும், பொதுமக்கள் சமுதாயம், ஆகிய இரண்டுமே இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்றும், அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

உணவு உற்பத்தி, உணவு விநியோகம் போன்றவற்றில் நிலவும் சமத்துவமின்மைகளைக் களைய, உலகளாவிய கொள்கைகள், மற்றும், நிதி கட்டமைப்பில் பரந்துபட்ட மாற்றங்கள் அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்ட இக்கூட்டத்தில், வளரும் நாடுகளின் கடன்கள் இரத்துசெய்யப்படுவது குறித்தும் பேசப்பட்டது.

இதற்கிடையே, உலகம் வெப்பமடைதலை 1.5 செல்சியுஸ் டிகிரிக்கு கொண்டுவரவேண்டுமெனில், வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்க, அனைத்து நாடுகளும், 2050ம் ஆண்டுவரை காத்திருக்காமல், உடனடியாகச் செயல்படவேண்டும் என்று, கெர்ரி அவர்கள், இத்தாலிய அரசு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

15 May 2021, 15:48