தேடுதல்

Vatican News
சிறாருடன் கர்தினால் எர்டோ சிறாருடன் கர்தினால் எர்டோ  

திருத்தந்தையின் வருகைக்காக காத்திருக்கும் ஹங்கேரி நாடு

கோவிட் பெருந்தொற்றின் காரணமாக ஹங்கேரி நாடு மரணங்களை சந்தித்துள்ள இத்தருணத்தில், திருத்தந்தையின் வருகை தங்கள் நாட்டு மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்கும் – கர்தினால் பீட்டர் எர்டோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பல்வேறு மனித நெருக்கடிகளைச் சந்தித்துவரும் ஹங்கேரி நாட்டு மக்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகை, நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது என்று, அந்நாட்டு கர்தினால் பீட்டர் எர்டோ (Péter Erdő) அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெறுவதாக இருந்த 52வது உலகத் திருநற்கருணை மாநாடு, கோவிட் 19 பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடியின் காரணமாக இவ்வாண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள உலகத் திருநற்கருணை மாநாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் செல்லவிருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, Esztergom-Budapest பேராயர் கர்தினால் பீட்டர் எர்டோ அவர்கள், திருத்தந்தையின் வருகை, தங்கள் நாட்டில் உருவாக்கியுள்ள ஆர்வத்தைக் குறித்து, தன் நேர்காணலில் குறிப்பிட்டார்.

ஏறத்தாழ 1 கோடி மக்கள் தொகை கொண்டுள்ள ஹங்கேரி நாட்டில், இதுவரை 29,000 பேர், கோவிட் பெருந்தொற்றின் காரணமாக இறந்துள்ளதை வருத்தத்துடன் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் எர்டோ அவர்கள், இத்தருணத்தில், திருத்தந்தையின் வருகை, தங்கள் நாட்டு மக்களுக்கு, ஆறுதலையும், நம்பிக்கையையும் வழங்கும் என்று கூறினார்.

சிறிது சிறிதாக, இயல்பு வாழ்வுக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் ஹங்கேரி நாட்டில், செப்டம்பர் மாதம் 12, ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புடாபெஸ்ட் நகரின், நாயகர்கள் சதுக்கத்தில் நிறைவேற்றும் திருப்பலி, தனி சிறப்புமிக்க பொதுநிகழ்வாக அமையும் என்று, கர்தினால் எர்டோ அவர்கள் கூறினார்.

இவ்வாண்டு செப்டம்பர் 5ம் தேதி முதல் 12ம் தேதி முடிய நடைபெறும் 52வது உலகத் திருநற்கருணை மாநாட்டில், கிரேக்க ஆர்த்தடாக்ஸ், மற்றும் கீழை வழிபாட்டு முறையைச் சார்ந்த ஆயர்களும் கலந்துகொள்வர் என்றும், இம்மாநாட்டு நிகழ்வுகளில், ஏனைய கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளும், யூதமதப் பிரதிநிதிகளும் கலந்துகொள்வர் என்றும், கர்தினால் எர்டோ அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

1881ம் ஆண்டு முதல், நடைபெற்றுவரும் உலகத் திருநற்கருணை மாநாடுகள், இவ்வாண்டு, புடாபெஸ்ட் நகரில் இரண்டாம் முறை நடைபெறுகிறது என்பதும், ஏற்கனவே ஒருமுறை, 1938ம் ஆண்டு, இந்நகரில் இம்மாநாடு நடைபெற்றது என்பதும், குறிப்பிடத்தக்கன.

19 May 2021, 14:46