தேடுதல்

திருத்தந்தையுடன், திருவழிபாடு, மற்றும் அருளடையாளம் பேராயத்தின் தலைவர் பேராயர் Arthur Roche திருத்தந்தையுடன், திருவழிபாடு, மற்றும் அருளடையாளம் பேராயத்தின் தலைவர் பேராயர் Arthur Roche  

திருவழிபாடு, பேராயத்தின் புதிய தலைவர்

திருவழிபாடு மற்றும் அருளடையாளம் பேராயத்தின் செயலராக இதுவரை பணியாற்றிவந்த பேராயர், Arthur Roche அவர்களை, அப்பேராயத்தின் தலைவராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருவழிபாடு மற்றும் அருளடையாளம் பேராயத்தின் செயலராக இதுவரை பணியாற்றிவந்த பேராயர், Arthur Roche அவர்களை, அப்பேராயத்தின் தலைவராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 27, இவ்வியாழனன்று நியமித்துள்ளார்.

அத்துடன், இத்தாலியின் Tortona மறைமாவட்டத்தின் ஆயர், Vittorio Francesco Viola அவர்களை, இப்பேராயத்தின் செயலராகவும், இப்பேராய அலுவலகத்தின் பொறுப்பாளராக இதுவரை பணியாற்றிவந்த அருள்பணி Aurelio García Marcías அவர்களை, இப்பேராயத்தின் நேரடிச் செயலராகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.

மேலும், மே 23, கடந்த ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட தூய ஆவியாரின் வருகைப்பெருவிழாவையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியாரை மையப்படுத்தி டுவிட்டர் செய்திகளை வெளியிட்டு வருவதன் தொடர்ச்சியாக, மே 27, இவ்வியாழனன்று, தூய ஆவியார் வழங்கும் மூன்று அறிவுரைகள் என்ற கருத்துடன், மூன்று டுவிட்டர் செய்திகளை பதிவுசெய்துள்ளார்.

"'நிகழ்பொழுதில் வாழுங்கள்' என்பது தூய ஆவியார் வழங்கும் முதல் அறிவுரை. 'இப்போது' என்பதைக்காட்டிலும் சிறந்த நேரம் எதுவும் இல்லை. இங்கே, இப்போது, என்பவைகளின் வழியே, நம் வாழ்வை, ஒரு பரிசாக உருவாக்கமுடியும். நிகழ்பொழுதில் வாழ்வோமாக!" என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட முதல் டுவிட்டர் பதிவில் இடம்பெற்றிருந்தன.

"'முழுமையைக் காணுங்கள்' என்பது, தூய ஆவியார் நம்மிடம் கூறும் இரண்டாவது அறிவுரை. கருத்தொருமிப்பு, ஒருமைப்பாடு, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றை நோக்கி, தூய ஆவியார், நம்மை வழிநடத்துகிறார். ஓருடலின் உறுப்பினர்களாக, ஒருவர் ஒருவரை, சகோதரர்களாக, சகோதரிகளாக காண்பதற்கு, தூய ஆவியார் நம்மைத் தூண்டுகிறார். முழுமையைக் காண்போமாக!" என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியாக அமைந்தது.

"இறுதியாக, 'உங்களுக்கு மேலாக கடவுளை வைத்திருங்கள்' என்பது மூன்றாவது அறிவுரை. நம்மை நாமே வெறுமையாக்கிக்கொள்வதன் வழியே, கடவுளுக்கு நாம் இடம் அளிக்கிறோம். உள்ளத்தில் எளியோராக மாறுவதன் வழியே, தூய ஆவியாரில் செல்வம் மிகுந்தவர்களாய் மாறுகிறோம். கடவுளுக்கு முதலிடம் வழங்குவோம்!" என்ற சொற்களை, தன் மூன்றாவது டுவிட்டர் பதிவின் வழியே வெளியிட்டிருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

27 May 2021, 13:56