தேடுதல்

1981ம் ஆண்டு புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் சுடப்பட்ட வேளையில்... 1981ம் ஆண்டு புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் சுடப்பட்ட வேளையில்...  (ANSA)

திருத்தந்தை 2ம் யோவான் பவுல் மீது தாக்குதல் – 40ம் ஆண்டு

திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள், தன்னைக் கொல்லமுயன்ற Ali Agca என்ற இளையவரை, உரோம் நகரின் Rebibbia சிறையில் சென்று சந்தித்த நிகழ்வு, மக்களால் எளிதில் மறக்க இயலாத ஓர் உன்னத நிகழ்வாக இன்றும் விளங்குகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சரியாக நாற்பது ஆண்டுகளுக்கு முன், 1981ம் ஆண்டு மே 13ம் தேதி, புதனன்று, பாத்திமா அன்னை மரியாவின் திருநாள் சிறப்பிக்கப்பட்ட வேளையில், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் புதன் மறைக்கல்வி உரை வழங்க வந்த திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் மீது கொலை முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது.

வத்திக்கான் செய்தித்துறையில் உயர்மட்ட ஆசிரியர்களாகப் பணியாற்றும் Andrea Tornielli, மற்றும் Alessandro Gisotti ஆகிய இருவரும், இந்த நாற்பதாண்டு நிறைவையொட்டி, தங்கள் கருத்துக்களை, இரு கட்டுரைகள் வடிவில் பதிவுசெய்துள்ளனர்.

1978ம் ஆண்டு, தன் 58வது வயதில் கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள், தன் பணிக்காலத்தின் மூன்றாம் ஆண்டில் இவ்வாறு தாக்கப்பட்டது, கத்தோலிக்க உலகை மட்டுமல்லாமல், உலகமனைத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்று, Tornielli அவர்கள் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை வழங்கும் நண்பகல் மூவேளை செப உரைகளை தன் மூன்றாண்டு பணியில், ஒருபோதும் தவறவிடாத திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள், இந்தக் கொலை முயற்சிக்குப் பின், மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்று படுத்திருந்த வேளையிலும், மே 17, ஞாயிற்று கிழமையில் தன் 'வானக அரசியே' வாழ்த்தொலி உரையை புனித பேதுரு வளாகத்தில் ஒளிபரப்பவேண்டும் என்ற ஆவலில், அவ்வுரையை ஒரு காணொளியாகப் பதிவுசெய்து வழங்கினார் என்று, Tornielli அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1981ம் ஆண்டு மே 13ம் தேதி, தான் அர்ஜென்டீனா திருப்பீட தூதரகத்தில் இருந்ததையும், திருத்தந்தையின் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்ட துயரச் செய்தியைக் கேட்டு, இறைவேண்டல் செய்ததையும் ஆசிரியர் Gisotti அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

ஜெமெல்லி மருத்துவமனையின் படுக்கையிலிருந்த வண்ணம் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் பதிவுசெய்த முதல் காணொளிச் செய்தியில், தன்னைத் தாக்கிய சகோதரரை தான் மன்னிப்பதாகக் கூறியிருந்ததை, Gisotti அவர்கள் தன் கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

அத்துடன், இரண்டு ஆண்டுகள் சென்று, 1983ம் ஆண்டு, டிசம்பர் 27ம் தேதி, திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள், தன்னைக் கொல்லமுயன்ற Ali Agca என்ற இளையவரை, உரோம் நகரின் Rebibbia சிறையில் சென்று சந்தித்த நிகழ்வு, மக்களால் எளிதில் மறக்க இயலாத ஓர் உன்னத நிகழ்வாக இன்றும் விளங்குகிறது என்று Gisotti அவர்கள் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

12 May 2021, 16:40