தேடுதல்

1981,மே 13–எண்ணிப்பார்க்க இயலாத நிகழ்வு, வத்திக்கான் வானொலியில்

திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நிகழ்ந்த ஐந்து நிமிடங்களில், அந்நிகழ்வைக் குறித்த முதல் அறிவிப்புகள், வத்திக்கான் வானொலியின் அனைத்து மொழிகளிலும் ஒலிபரப்பாயின

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

1981ம் ஆண்டு மே 13ம் தேதி, புதனன்று, திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் வழங்கவிருந்த புதன் மறைக்கல்வி உரையை நேரடியாக ஒலிபரப்பு செய்வதற்கு காத்திருந்த வத்திக்கான் வானொலி விரிவுரையாளர் Benedetto Nardacci அவர்கள், அன்று அந்த வளாகத்தில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் கொலைமுயற்சியை ஒலிப்பதிவு செய்தது, உலகெங்கும் ஒலிபரப்பானது.

1981ம் ஆண்டு, மே 13, பாத்திமா அன்னை மரியாவின் திருநாளை மக்களுடன் கொண்டாட, மாலை 5.17 மணியளவில் திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள், புனித பேதுரு வளாகத்தில் நுழைந்தது முதல், Nardacci அவர்கள், தன் விரிவுரையைத் துவங்கினார்.

அவரது விரிவுரை துவக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களுக்குப் பின், மாலை 5.22 மணிக்கு, துப்பாக்கியால் சுடும் ஒலி கேட்கிறது. இதைத் தொடர்ந்து, திருத்தந்தை தான் வலம்வந்த வாகனத்திலேயே சாய்ந்தது, அதைத் தொடர்ந்து, காவல்துறையின் அபாய சங்கு ஒலி, அதைத்தொடர்ந்து, அவசர மருத்துவ உதவி வாகனத்தின் ஒலி ஆகியவை, இந்த ஒலிபரப்பில் தொடர்வதைக் கேட்கிறோம்.

திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள், அன்னை மரியாவின் திருநாளை மக்களோடு கொண்டாட வந்திருந்த சந்திப்பை, துயரம் நிறைந்த ஒரு நிகழ்வாக மாற்றிய Ali Agca அவர்களின் துப்பாக்கிச் சூடு, சூழ இருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியவேளை, "மக்கள் அனைவரும் எழுந்து நிற்கின்றனர்... அவர்களில் பெரும்பான்மையானோர் அதிர்ச்சியில் மௌனமாகி நிற்கின்றனர்" என்ற சொற்களை, Nardacci அவர்கள் வத்திக்கான் வானொலியில் கூறுகிறார்.

இதுவரை, உலகின் பல பகுதிகளில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களை அவ்வப்போது வத்திக்கான் வானொலியில் கூறிவந்த நாங்கள், இப்போது அத்தகைய ஒரு தாக்குதல் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்திலேயே, திருத்தந்தையின் மீது மேற்கொள்ளப்பட்டது என்பதை வேதனையுடன் குறிப்பிடுகிறோம் என்று, Nardacci அவர்கள் கூறினார்.

துப்பாக்கி சூட்டால் தாக்கப்பட்ட  திருத்தந்தை 2ம் யோவான் பவுல்
துப்பாக்கி சூட்டால் தாக்கப்பட்ட திருத்தந்தை 2ம் யோவான் பவுல்

அன்பு, மன்னிப்பு, ஒப்புரவு என்று, ஒவ்வொரு திருத்தந்தையும் எழுப்பி வந்த குரல்கள் வெளிப்பட்ட புனித பேதுரு வளாகத்திலேயே தீவிரவாதத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது என்று, Nardacci அவர்கள் தன் விரிவுரையில் கூறினார்.

அந்த மாலை நேரம் முழுவதும், வத்திக்கான் வானொலியின் நேரடி ஒலிபரப்பு தொடர்ந்தது என்பதும், துப்பாக்கி சூடு நிகழ்ந்த ஐந்து நிமிடங்களில், அந்நிகழ்வைக் குறித்த முதல் அறிவிப்புகள் வத்திக்கான் வானொலியின் அனைத்து மொழிகளிலும் ஒலிபரப்பாயின என்பதும், குறிப்பிடத்தக்கன.திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள் எடுத்துச் செல்லப்பட்ட ஜெமெல்லி (Gemelli) மருத்துவமனையில், அவரது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட அறைக்கு வெளியே, வத்திக்கான் வானொலியின் இயக்குனர், இயேசு சபை அருள்பணியாளர், ரொபெர்த்தோ துச்சி அவர்கள், அமர்ந்து, அடுத்த ஐந்து மணி நேரங்கள், மருத்துவ மனையிலிருந்து நேரடி ஒலிபரப்பைத் தொடர்ந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2021, 14:56