தேடுதல்

பிலிப்பீன்ஸ் நாட்டவருக்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி

பிலிப்பீன்ஸ் நாட்டில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு கத்தோலிக்க விசுவாசிகளுக்கு காணொளிச் செய்தியொன்றை, அனுப்பியுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு கத்தோலிக்க விசுவாசிகளுக்கு காணொளிச் செய்தியொன்றை, ஏப்ரல் 4 இஞ்ஞாயிறன்று அனுப்பியுள்ளார்.

இஸ்பானிய மொழியில் திருத்தந்தை வழங்கியுள்ள இச்செய்தியில், நாசரேத்து, சிலுவை, மற்றும் பெந்தக்கோஸ்து என்ற நம்பிக்கை மறையுண்மைகள் மூன்றையும் குறித்து தன் எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்.

பிலிப்பீன்ஸ் நாட்டில் நற்செய்தி அறிவிக்கப்பட்ட நேரத்தில், அது, நாசரேத்தில் இயேசுவும், திருக்கும்பமும் மேற்கொண்ட மறைந்த வாழ்வைப்போல, மிகவும் சிறிதாக மறைவாக வளர்ந்துவந்தது என்பதை, திருத்தந்தை தன் முதல் கருத்தாகக் கூறினார்.

பிலிப்பீன்ஸ் மக்கள் சந்தித்துள்ள சிலுவைகளை தன் இரண்டாவது கருத்தாகப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த யூபிலி ஆண்டிற்கு அந்நாட்டு மக்கள் தயாரித்து வந்த வேளையில் உருவான நிலநடுக்கம், புயல், வெள்ளம், மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று ஆகியவற்றை, தன் காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுப் பேசினார்.

இத்தனை துன்பங்கள் நடுவிலும், பிலிப்பீன்ஸ் விசுவாசிகள், தங்கள் சிலுவைகளை, உறுதியுடன் சுமந்து செல்வதைக்குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்ட திருத்தந்தை, அவர்கள் நம்பிக்கையுடன் தங்கள் பயணத்தைக் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

துயர்கள் அனைத்திலும் அன்னை மரியாவின் துணை எப்போதும் உண்டு என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியாரின் வருகையைக் கொணர்ந்த பெந்தக்கோஸ்து நாளில் அன்னை மரியாவும் சீடர்களோடு இருந்ததுபோல், பிலிப்பீன்ஸ் மக்களின் பெந்தக்கோஸ்தாக விளங்கும் இந்த யூபிலியில் அன்னை மரியா அந்நாட்டு மக்களுடன் துணை வருகிறார் என்பதை திருத்தந்தை இக்காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

பிலிப்பீன்ஸ் நாட்டில் தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தை, இக்காணொளிச் செய்தியில் நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிலிப்பீன்ஸ் மக்கள் தங்கள் மத நம்பிக்கையை, தாராள உள்ளத்துடன் கொண்டாடத் தெரிந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 April 2021, 12:21