தேடுதல்

அன்னை மரியாவிடம் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அன்னை மரியாவிடம் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  

இறைவேண்டலில் நம்பிக்கை வைப்பதே மக்களின் வலிமை

கிறிஸ்தவத்தின் தொடக்க காலத்திலிருந்தே, கிறிஸ்தவர்கள், ஆபத்து காலங்களில் அன்னை மரியாவின் பரிந்துரையை மன்றாடியுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும் பரவியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வரவேண்டும் என்ற வேண்டுதலுடன், வருகிற மே மாதம் முழுவதும், உலகின் அனைத்து திருத்தலங்களிலும், செபமாலை பக்தி முயற்சி மேற்கொள்ளப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்பு, ஆபத்து காலங்களில் இறைவேண்டலின் வல்லமையை வெளிப்படுத்துகின்றது.

திருத்தந்தையின் இந்த அழைப்பு, கிறிஸ்தவத்தின் தொடக்ககாலத்திலிருந்தே, கிறிஸ்தவர்கள் ஆபத்து காலங்களில் அன்னை மரியாவின் பரிந்துரைக்காக மன்றாடியதையும் நினைவுபடுத்துகின்றது என்று, வத்திக்கான் செய்தித்துறை கூறியுள்ளது.

மருத்துவமனை அறைகளில், கண்ணுக்குப் புலப்படாத பெருந்தொற்று கிருமி, நோயாளிகளின் மூச்சுவிடும் திறனை, மெல்ல மெல்ல இழக்கச்செய்யும்போது, அல்லது, மருத்துவமனைகளில் இடமில்லாமல், தெருக்களிலே துன்புறும்நிலை ஏற்படும்போது, இறைவேண்டல் செய்வது, உற்ற துணையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வாக்குறுதி

குழுமமாக இணைந்து பொதுவில் எழுப்பும் இறைவேண்டல் பற்றி சந்தேகமோ அல்லது, அது பற்றிய தவறான வழிநடத்தலோ ஏற்பட்டுள்ளவேளைகளில், “உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்” (மத்,18: 19) என்று மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டுள்ள, இயேசுவின் திருச்சொற்களை நினைவுகூரலாம் என்று, வத்திக்கான் செய்தித்துறை கூறியுள்ளது.

இறைவேண்டல் பற்றிய இந்த வாக்குறுதி, நமக்காக இறைத்தந்தையிடம் பரிந்துபேசுபவராகிய, அன்னை மரியாவின் மகனாகிய இயேசுவிடமிருந்து வந்துள்ளது என்றும், இதுவே இறைவேண்டலின் வல்லமையைக் காட்டுகிறது என்றும், வத்திக்கான் செய்தித்துறை கூறியுள்ளது.

மரியா, கடவுளின் தாய் என்று, பழங்கால எபேசு பொதுச்சங்கத்தால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னரே, இறைவனின் புனித அன்னையே, உமது பாதுகாவலில், உம் அடைக்கலத்தை நாடுகின்றோம் என்று, குறைந்தது, 1,800 ஆண்டுகளாக, திருஅவை இறைவேண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மே மாதம் முழுவதும் செபமாலை

மேலும், "திருஅவை முழுவதிலுமிருந்து இறைவனை நோக்கி இடைவிடாத செபம் எழுந்தது" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த உலகளாவிய முயற்சியை, வருகிற மே மாதம் முதல் நாள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கிவைப்பார் என்றும், மே மாதம் 31ம் தேதி, இந்த பக்தி முயற்சியை அவர் நிறைவு செய்துவைப்பார் என்றும் புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாளும், உரோம் நேரம் மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த பக்தி முயற்சி, திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வமான அலைவரிசைகளின் வழியே, நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 April 2021, 15:15