தேடுதல்

Vatican News
மக்களோடு இணைந்து செபமாலை செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் மக்களோடு இணைந்து செபமாலை செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

மே மாதம் முழுவதும், உலகத் திருத்தலங்களில் செபமாலை

உலகெங்கும் பரவியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வரவேண்டும் என்ற வேண்டுதலுடன், வருகிற மே மாதம் முழுவதும், உலகின் அனைத்து திருத்தலங்களிலும், செபமாலை பக்தி முயற்சி மேற்கொள்ளப்படும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும் பரவியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வரவேண்டும் என்ற வேண்டுதலுடன், வருகிற மே மாதம் முழுவதும், உலகின் அனைத்து திருத்தலங்களிலும், செபமாலை பக்தி முயற்சி மேற்கொள்ளப்படும் என்று புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை அறிவித்துள்ளது.

"திருஅவை முழுவதிலுமிருந்து இறைவனை நோக்கி இடைவிடாத செபம் எழுந்தது" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த உலகளாவிய முயற்சியை, மே மாதம் முதல் நாள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கிவைப்பார் என்றும், மே மாதம் 31ம் தேதி, இந்த பக்தி முயற்சியை அவர் நிறைவு செய்துவைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும், உரோம் நேரம் மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த பக்தி முயற்சி, திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வமான அலைவரிசைகளின் வழியே, நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

அன்னை மரியாவுக்காகவும், செபமாலைக்கெனவும் அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தில், இந்த பெருந்தொற்றை இறைவன் முடிவுக்குக் கொணரவேண்டும் என்ற சிறப்பு வேண்டுதலுடன், அன்னை மரியாவின் பரிந்துரையை நாடி, இந்த முயற்சி, உலகெங்கிலும் உள்ள திருத்தலங்களில் மேற்கொள்ளப்படும் என்று, புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை தெரிவித்துள்ளது.

2020ம் ஆண்டு, மார்ச் மாதம், உலகெங்கும், இந்தப் பெருந்தொற்றின் முதல் அலை பரவிவந்த வேளையில், புனித பேதுரு பெருங்கோவிலின் முன்னாள் தலைமை அருள்பணியாளர், கர்தினால் ஆஞ்செலோ கொமாஸ்த்ரி அவர்கள், நண்பகல் 12 மணிக்கு, செபமாலை, மற்றும், மூவேளை செப உரை ஆகிய இறைவேண்டல் முயற்சிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

22 April 2021, 16:03