தேடுதல்

Vatican News
அருள்பணி Dionysius Mintoff அவர்களுக்கு திருத்தந்தையின் செய்தி அருள்பணி Dionysius Mintoff அவர்களுக்கு திருத்தந்தையின் செய்தி 

90வது வயதை நிறைவு செய்த அருள்பணியாளருக்கு வாழ்த்து

மால்ட்டா நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்கன் துறவி, அருள்பணி Dionysius Mintoff அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் கைப்பட எழுதிய வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மால்ட்டா நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்கன் துறவி, அருள்பணி Dionysius Mintoff அவர்கள், அண்மையில், தன் 90வது வயதை நிறைவு செய்துள்ளதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் கைப்பட எழுதிய வாழ்த்துச் செய்தி ஒன்றை, அவருக்கு அனுப்பியுள்ளார்.

மால்ட்டா நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள குடிபெயர்ந்தோருக்கென, அமைதியின் மையம் என்ற அமைப்பை உருவாக்கி, பணியாற்றிவரும் அருள்பணி Mintoff அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியில், அவருக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்களையும், உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள், உலக அமைதியை வேண்டி 'Pacem in Terris' திருமடலை வெளியிட்டதைத் தொடர்ந்து, அருள்பணி Mintoff அவர்கள், 1971ம் ஆண்டு, மால்ட்டா நாட்டில், 'திருத்தந்தை 23ம் யோவான் அமைதி மையம்' என்ற இல்லத்தை உருவாக்கினார்.

அமைதியின் தூதரான அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் வழித்தோன்றலாகவும், போரின் விளைவுகளைக் கண்ட ஒரு மனிதராகவும், வாழ்ந்துவரும் தான், திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள் கூறிய உலக அமைதியை வளர்க்க இவ்வில்லத்தை நிறுவியதாக அருள்பணி Mintoff அவர்கள் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

2020ம் ஆண்டு மே மாதத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மால்ட்டா நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்ட வேளையில், அவர் நிச்சயம் இந்த அமைதி மையத்திற்கு வருவார் என்று தான் எதிர்பார்த்ததாகக் கூறிய அருள்பணி Mintoff அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்றின் விளைவாக திருத்தந்தையின் பயணத்திட்டம் மாற்றப்பட்டது குறித்து தான் வருத்தம் அடைந்ததாக கூறியுள்ளார்.

பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் ஆகியவை சந்திக்கும் ஓரிடமாக மால்ட்டா நாடு இருக்கவேண்டும் என்ற தன் கனவை நனவாக்க, 'திருத்தந்தை 23ம் யோவான் அமைதி மையம்' உதவும் என்று தான் நம்புவதாக, அருள்பணி Mintoff அவர்கள் கூறியுள்ளார்.

08 April 2021, 14:43