தேடுதல்

Vatican News
மறைக்கல்வி உரையின்போது இறைவேண்டல் செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ் மறைக்கல்வி உரையின்போது இறைவேண்டல் செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

நம்பிக்கையின் மூச்சாக இறைவேண்டல் - திருத்தந்தை

"நாம் எவ்வளவுக்கெவ்வளவு இறைவேண்டல் செய்வதற்கு கற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நம்பிக்கையிலும் வளர்கிறோம்" - திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவேண்டலை மையப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிவரும் புதன் மறைக்கல்வி உரைகளில், ஏப்ரல் 14 இப்புதனன்று, நாம் இறைவெண்டலைக் கற்றுக்கொள்ளும் சூழல்களைக் குறிப்பிட்டுப் பேசினார்.

நம் குடும்பங்கள், பங்குத்தளங்கள், திருஅவை ஆகியவை, நாம் இறைவேண்டல் செய்வதற்கு உதவியாக உள்ள சூழல்கள் என்பதை தெளிவுபடுத்திய திருத்தந்தை, நாம் எவ்வளவுக்கெவ்வளவு இறைவேண்டலில் வளர்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நம்பிக்கையிலும் வளர்கிறோம் என்ற கருத்தை தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவுசெய்திருந்தார்.

"நம் நம்பிக்கையின் மூச்சாக இறைவேண்டல் அமைந்துள்ளது. நாம் எவ்வளவுக்கெவ்வளவு இறைவேண்டல் செய்வதற்கு கற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நம்பிக்கையிலும் வளர்கிறோம்" என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

லூக்கா நற்செய்தி 18ம் பிரிவில், தனக்கு நீதி வழங்குமாறு, கைம்பெண் ஒருவர் நேர்மையற்ற நடுவரிடம் தொடர்ந்து விண்ணப்பித்த உவமையின் இறுதியில், "மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?" (லூக்கா 18:8) என்று இயேசு எழுப்பிய கேள்வியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறைக்கல்வி உரையில் குறிப்பிட்டு, அக்கேள்வி இன்றும் இயேசுவால் நம்மை நோக்கி எழுப்பப்படுகிறது என்று கூறினார்.

மத நம்பிக்கையை வளர்க்க, பல்வேறு திட்டங்கள் வழியே முயற்சி செய்வது, கிறிஸ்தவ வழிமுறை அல்ல என்பதை தன் மறைக்கல்வி உரையில் தெளிவுபடுத்திய திருத்தந்தை, இறைவேண்டல் என்ற எண்ணெய் மட்டுமே, நம்பிக்கை என்ற விளக்கை இவ்வுலகில் தொடர்ந்து ஒளிர்விடவைக்கும் என்று கூறினார்.

ஒவ்வொரு நாளும், @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

ஏப்ரல் 14, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 3.188 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 89 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

14 April 2021, 12:15