தேடுதல்

Vatican News
கோவிட்-19 தடுப்பூசி போடும் மருத்துவர்கள், தன்னார்வலர்கள் கோவிட்-19 தடுப்பூசி போடும் மருத்துவர்கள், தன்னார்வலர்கள் 

பெருந்தொற்று சூழலில் நம்பிக்கையை இழக்காதிருப்போம்

இந்த இருளான பெருந்தொற்று மாதங்களில், நம்பிக்கையை இழக்கமாலிருக்க உயிர்த்த ஆண்டவர் நமக்கு விடுக்கும் அழைப்புக்குச் செவிமடுப்போம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா பெருந்தொற்று உருவாக்கியுள்ள இருள்நிறைந்த இந்த காலக்கட்டத்தில், நம்பிக்கையை இழக்கவேண்டாம் என, உயிர்த்த ஆண்டவர் நம்மிடம் கூறுகிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 06, இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.

உயிர்ப்புப் பெருவிழா, பெருந்தொற்று ஆகிய இரு ஹாஷ்டாக்குகளுடன் தன் டுவிட்டர் செய்தியை, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள திருத்தந்தை, “பெருந்தொற்றின் இந்த இருளான மாதங்களில், வாழ்வை மீண்டும் தொடங்கவும், ஒருபோதும் நம்பிக்கையை இழக்கமாலிருக்கவும் உயிர்த்த ஆண்டவர் நமக்கு விடுக்கும் அழைப்புக்குச் செவிமடுப்போம்” என்ற சொற்களைப் பதிவுசெய்துள்ளார்.

நம்பிக்கைதரும் இயேசுவின் உயிர்ப்பு

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்ப்புப் பெருவிழாவன்று வழங்கிய செய்தி, நம்பிக்கையைத் தேடிக்கொண்டிருக்கும் ஓர் உலகிற்கு, ஆறுதலாக இருந்தது என்று, ஆசியச் செய்தி கூறுகின்றது.

மியான்மாரில் இளையோர் கொல்லப்பட்டிருப்பது, பாங்காக்கில் இடம்பெறும் அடக்குமுறைகள், ஹாங்காக்கில் இடம்பெறும் கைதுகள், பொருளாதார நெருக்கடிகள்... இவ்வாறு இக்காலக்கட்டத்தில் நிலவும் சமுதாயப் பெருந்தொற்றுக்களைக் கோடிட்டு காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு தருகின்ற நம்பிக்கை பற்றிக் கூறியுள்ளார் என அச்செய்தி உரைக்கின்றது.

இயேசுவின் உயிர்ப்பு, தெளிவற்ற ஓர் அடையாளமோ அல்லது, உளவியல் முறைப்படி ஆறுதல் தருவதோ அல்லது, ஒரு கடந்தகால நிகழ்வோ அல்ல, மாறாக, மிகவும் நம்பிக்கையிழந்த சூழல்களிலும்கூட, கடவுள் நம் நம்பிக்கையாக இருக்கிறார், நம் வாழ்வின் வேதனைகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பவர் அல்ல அவர் என்று,  திருத்தந்தை கூறியிருப்பது ஆறுதலாக உள்ளது என, ஆசியச் செய்தி கூறுகின்றது.

இதற்கிடையே, மியான்மாரில் இடம்பெறும் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க ஐக்கிய நாடு உள்ளிட்ட சில நாடுகள், மியான்மாருக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதிக்க திட்டமிட்டு வருகின்றன என செய்திகள் கூறுகின்றன. (AsiaNews)

06 April 2021, 15:06