தேடுதல்

Vatican News
புனித பவுஸ்தீனா சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் புனித பவுஸ்தீனா சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

இறைவனின் இரக்கம் நிறைந்த அன்பு நமக்குத் தேவை

தன்முனைப்பு, புறக்கணிப்பு போன்ற தொற்றுக்கிருமிகளுக்கு எதிரான தடுப்பூசி, இறை இரக்கம் - அருள்பணி Jozef Bart

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம், நம் தவறுகளையே தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பதை அவர் விரும்பவில்லை, மாறாக, நாம், அவரை நோக்கிப் பார்க்குமாறும்,  நம் தவறுகளில், நமக்கு உதவிபுரியவும் அவர் விரும்புகிறார். நம் துயரங்களில் அவரது இரக்கமுள்ள அன்பு நமக்குத் தேவைப்படுவதையும் அவர் உணர்த்துகிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 10, இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.

ஏப்ரல் 11, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் இறை இரக்க ஞாயிறை மையப்படுத்தி, இறை இரக்கம் (#DivineMercy) என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவுசெய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் இரக்கம் நிறைந்த அன்பு, அவரின் பிள்ளைகளாகிய நமக்கு எவ்வளவு தேவைப்படுகின்றது என்பதை வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளார்.

இறை இரக்க ஞாயிறு திருப்பலி

மேலும், இறை இரக்க ஞாயிறாகிய, ஏப்ரல் 11, இஞ்ஞாயிறன்று, உரோம் பெருநகரில் அமைந்துள்ள Santo Spirito in Sassia ஆலயத்தில், உரோம் நேரம், காலை 10.30 மணிக்கு, திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலியில், புலம்பெயர்ந்தோர் மற்றும், கைதிகள் சிலர் பங்குபெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 21 ஆண்டுகளுக்குமுன், உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்துவரும் ஞாயிறை, இறை இரக்க ஞாயிறாக அறிவித்தார். 

இறை இரக்க ஆன்மீகத்தைப் பரப்பும் மையமாக விளங்கும் உரோம் Santo Spirito in Sassia ஆலயத்தில், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், மற்றும், புனித பவுஸ்தீனா கோவால்ஸ்கா ஆகிய இருவரின் புனிதப்பெருள்கள் உள்ளன.

போலந்து நாட்டில் பிறந்த அருள்சகோதரி புனித பவுஸ்தீனா (ஆக.25,1905-அக்.5,1938) அவர்கள், தன் வாழ்நாள் முழுவதும் இயேசுவை பலமுறை காட்சிகளில் கண்டதாகவும், அவரோடு உரையாடியதாகவும் கூறியுள்ளார். இவர், இறை இரக்கத்தின் தூதர் என்று அழைக்கப்படுகின்றார்.

இறை இரக்க ஞாயிறு பற்றி வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, Santo Spirito in Sassia ஆலய அதிபர் அருள்பணி Jozef Bart அவர்கள், இறை இரக்கம், தன்முனைப்பு என்ற தொற்றுக்கிருமிக்கு எதிரான தடுப்பூசி என்று கூறினார்.

10 April 2021, 14:54