தேடுதல்

Vatican News
புனித பேதுரு வளாகத்தின் மேல்மாடி சன்னலிலிருந்து மக்களை வாழ்த்தும் திருத்தந்தை பிரான்சிஸ் புனித பேதுரு வளாகத்தின் மேல்மாடி சன்னலிலிருந்து மக்களை வாழ்த்தும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

பேதுரு வளாகத்தின் மேல்மாடியிலிருந்து, மீண்டும் திருத்தந்தை

ஏப்ரல் 18, வருகிற ஞாயிறு நண்பகலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு வளாகத்தின் மேல்மாடியிலிருந்து 'வானக அரசியே வாழ்த்தொலி உரை'யை வழங்குவார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உயிர்த்த ஆண்டவர் நம் துணையாக இருக்கும்போது, மரணத்தைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை என்ற கருத்தை, ஏப்ரல் 15, இவ்வியாழனன்று, 'இறைவேண்டல்' மற்றும் 'உயிர்ப்பு விழா' என்ற இரு 'ஹாஷ்டாக்'குகளுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

"கிறிஸ்தவர் ஒருவர் இறைவேண்டல் செய்யும்போது, மரணமே நடுங்குகிறது, ஏனெனில், மரணத்தைவிட சக்தி மிக்கவர் ஒருவர், இறைவேண்டல் செய்பவரின் துணையாக இருக்கிறார் என்பதை அது அறியும்: அவர்தான் உயிர்த்த ஆண்டவர்" என்ற சொற்கள் திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இடம்பெற்றிருந்தன.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு வளாகத்தின் மேல்மாடியிலிருந்து, ஒவ்வொரு ஞாயிறன்றும், நண்பகலில் வழங்கிவந்த 'வானக அரசியே வாழ்த்தொலி உரை'யை, ஏப்ரல் 18, வருகிற ஞாயிறு மீண்டும் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடியால் இத்தாலிய அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, திருத்தந்தை, தன் புதன் மறைக்கல்வி உரைகளையும், ஞாயிறு நண்பகல் உரைகளையும், திருத்தந்தையர் இல்லத்தின் நூலக அறையிலிருந்து வழங்கிவந்தார்.

மார்ச் 28, குருத்தோலை ஞாயிறு, மற்றும் ஏப்ரல் 4, உயிர்ப்புப் பெருவிழா ஆகிய இரு நாள்கள், நண்பகல் மூவேளை செப உரையையும், 'Urbi et Orbi' சிறப்புச் செய்தி, மற்றும், ஆசீரையும் புனித பேதுரு பெருங்கோவிலிலிருந்து வழங்கினார் திருத்தந்தை.

ஏப்ரல் 11, இறை இரக்க ஞாயிறு திருப்பலியை, Santo Spirito in Sassia என்ற கோவிலில் நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே கோவிலில், அன்றைய 'வானக அரசியே வாழ்த்தொலி உரை'யை வழங்கினார்.

ஏப்ரல் 18, வருகிற ஞாயிறன்று, திருத்தந்தை, மீண்டும், புனித பேதுரு வளாகத்தைப் பார்த்தவண்ணம் அமைந்திருக்கும் மேல்மாடி சன்னலிலிருந்து, 'வானக அரசியே வாழ்த்தொலி உரை'யை வழங்கவுள்ளார்.

15 April 2021, 14:27