தேடுதல்

மக்களோடு செயல்படும் ஓர் அரசியல் ஊக்குவிக்கப்பட...

ஓர் உண்மையான மேய்ப்பர், தன் மக்களின் உணர்வுகளோடு பங்குகொண்டு, அவர்கள் முன்னேறிச் செல்லவேண்டிய சரியான பாதையைக் காட்டுபவராக இருக்கவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மக்களுக்காக மட்டுமல்லாமல், அவர்களின் குழுமங்களிலும், மதிப்பீடுகளிலும் வேரூன்றப்பட்டு, அவர்களோடு செயல்படும் ஓர் அரசியல் ஊக்குவிக்கப்படுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பன்னாட்டு மெய்நிகர் கூட்டம் ஒன்றிற்கு அனுப்பிய காணொளிச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

ஏப்ரல் 15, இவ்வியாழன் மாலையில், இலண்டனில், "மக்களில் உறுதியாக நிலைநிறுத்தப்பட்ட ஓர் அரசியல்" என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டு கூட்டத்திற்கு அனுப்பிய காணொளிச் செய்தியில், "நிலம், இல்லிடம், வேலை" ஆகிய மூன்று அம்சங்களை மையப்படுத்தி, தன் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்கூட்டத்தில் பங்குபெறும் பிரதிநிதிகள் எடுக்கும் தீர்மானங்கள், வறியநிலையிலுள்ள குழுமங்கள், மாண்புள்ள ஒரு வாழ்வு வாழ்வதற்கு உதவுவதாக அமைந்திருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, தலைவர்கள், ஒரு நல்ல ஆயன் போன்று, சமுதாயத்தில் மிகவும் வலுவற்றோர் மீது முதலில் அக்கறை காட்டவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நிலம், இல்லிடம், வேலை ஆகியவற்றுக்காகப் போராடும் மக்கள், எதிர்ப்பு, மற்றும், புறக்கணிப்பு போன்ற துயரங்களை எதிர்கொள்ளும்போது, அவர்களுக்குத் தோள்கொடுக்க  வேண்டும் என்று, தன் செய்தியில் வலியுறுத்திய திருத்தந்தை, இக்கூட்டத்தினரின் பணியும், சான்று வாழ்வும், கோவிட்-19 பெருந்தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து மிகவும் அவசரத் தேவையானதாக மாறியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மக்களுக்காகச் செயல்படும் ஓர் அரசியல், மக்களின் வாழ்வில் வேரூன்றப்பட்ட, உடன்பிறந்த உணர்வுகொண்ட ஓர் அரசியலாக அமையவேண்டும் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார். 

கனவு காண்போம்

"கனவு காண்போம்" என்ற தலைப்பில் அண்மையில் வெளியிடப்பட்ட தன் நூலின் மையக்கருத்தை அடிப்படையாக வைத்து இந்த பன்னாட்டு கூட்டம் நடைபெறுகின்றது என்றும், மக்கள், கூட்டங்கள் நடத்தவும், தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும், அவர்களுக்கு புதிய பாதைகளைத் திறந்துவிடுகின்ற, பணிபுரியும் ஓர் அரசியலுக்கு, அந்நூலில் அழைப்பு விடுத்திருப்பதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மக்களை மதிப்பது என்பது, அவர்களின் மத உணர்வுகளையும், அவர்களின் நிறுவனங்களையும் மதிப்பதாகும் என்றும், அதேநேரம், மத நிறுவனங்களும், மக்கள் மீது எதையும் திணிக்காமல், நமக்கு முன்னே கடவுள் எப்போதும் செல்கிறார் என்பதை நினைவுபடுத்தும் அம்மக்களோடு, உடன்பயணிக்கவேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார். 

ஓர் உண்மையான மேய்ப்பர்

ஓர் உண்மையான மேய்ப்பர், தன் மக்களுக்கு முன்னும், பின்னும், அவர்கள் மத்தியிலும் நடந்துசென்று, அவர்களின் உணர்வுகளில் கலந்து, அவர்கள் முன்னேறிச் செல்லவேண்டிய சரியான பாதையைக் காட்டுபவராக இருக்கவேண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதனாலேயே கனவு காண்போம் என்ற நூலில், ஒவ்வொரு மறைமாவட்டமும், மக்களின் இயக்கங்களோடு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று தான் குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்த, இலண்டன் இறையியல், மற்றும், சமுதாய மையத்தினர் தொடங்கி, அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஏழை சமுதாயங்களுக்கு உதவும் மனித முன்னேற்ற கத்தோலிக்க கழகம் உட்பட, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அக்கூட்டத்தில் கலந்துகொண்ட, அனைத்து நிறுவனங்களுக்கும் தன் நன்றியையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஏழை மக்களுக்கு உதவிவரும், அந்நாட்டு மனித முன்னேற்ற கத்தோலிக்க கழகம், இவ்வாண்டு தன் ஐம்பதாவது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 April 2021, 13:06