தேடுதல்

உக்ரைன் அமைதிக்காக உரோம் நகரில் வழிபாடு உக்ரைன் அமைதிக்காக உரோம் நகரில் வழிபாடு 

கிழக்கு உக்ரைனின் பதட்ட நிலைகள் குறித்து திருத்தந்தை கவலை

பதட்ட நிலைகள் களையப்பட்டு, அதற்கு மாறாக, நம்பிக்கையும், ஒப்புரவும் அமைதியும் ஊக்குவிக்கப்படுவதையே, அனைவரும் விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிழக்கு உக்ரைனின் பல்வேறுப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்த விதி மீறல்கள் இடம்பெற்று வருவது குறித்து தன் ஆழ்ந்த கவலையை, ஞாயிறு 'வானக அரசியே' வாழ்த்தொலி உரைக்குப்பின் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உக்ரைனுக்கும்  இரஷ்யாவுக்கும் இடையே நிலவும் பதட்ட நிலைகள் முடிவுக்கு வந்து, ஒப்புரவு நிலவவேண்டும் என செபிக்குமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிழக்கு உக்ரைன் பகுதியில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவது, தனக்கு ஆழ்ந்த கவலையை தருகின்றது என்பதையும் குறிப்பிட்டார்.

பதட்ட நிலைகள் களையப்பட்டு, அதற்கு மாறாக, நம்பிக்கையும், ஒப்புரவும் அமைதியும் ஊக்குவிக்கப்படுவதையே, அனைவரும் விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை குறிப்பிட்ட திருத்தந்தை, மிகவும் நெருக்கடியான இச்சூழல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தன் நெருக்கத்தை வெளியிடுவதாகவும் கூறினார்.

இரஷ்ய துருப்புக்கள் உக்ரைன் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டு வருவதும், அண்மையில் Donbass பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்களும் இரு நாடுகளுக்கும் இடையே பதட்ட நிலைகளுக்கு வழிவகுத்துள்ளன.

உக்ரைன் அரசின் கூற்றுப்படி, Crimea பகுதியை சட்ட விரோதமாக 2014ம் ஆண்டு இரஷ்யா தன்னோடு இணைத்துக் கொண்டதைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்களில் ஏறக்குறைய 14,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரஷ்யா, பிரான்ஸ், மற்றும் ஜெர்மன் அரசுத் தலைவர்களுடன் இணைந்து அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, இந்த பதட்ட நிலகளை முடிவுக்குக் கொணரும் ஆவலை, ஏற்கனவே,  ஏப்ரல் 16ம் தேதி உக்ரைன் அரசுத்தலைவர் Volodymyr Zelenskiy அவர்கள் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 April 2021, 13:22