தேடுதல்

இத்தாலிய தேசிய கத்தோலிக்க அமைப்பினர் சந்திப்பு இத்தாலிய தேசிய கத்தோலிக்க அமைப்பினர் சந்திப்பு 

இத்தாலிய தேசிய கத்தோலிக்க அமைப்பினரிடம் திருத்தந்தை

இத்தாலிய தேசிய கத்தோலிக்க அமைப்பு, எப்போதும் இத்தாலிய வரலாற்றின் ஓர் அங்கமாக இருந்து, இத்தாலி முழுவதற்கும் நம்பிக்கையூட்டும் கருவியாக இருந்து வருகின்றது – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தன் 17வது தேசிய கூட்டத்தை நடத்திவரும், இத்தாலிய தேசிய கத்தோலிக்க அமைப்பின் எண்பது பிரதிநிதிகளை, ஏப்ரல் 30, இவ்வெள்ளியன்று, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து, உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த பெருந்தொற்று காலத்தில், செயல், கத்தோலிக்கர், இத்தாலியர் ஆகிய மூன்று சொற்களை  மையப்படுத்தி, தன் கருத்துக்களை எடுத்துரைக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

செயல்

இயேசு விண்ணேற்றமடைந்தபின், சீடர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர் என்றும், "ஆண்டவரும் அவர்களோடு உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்" (மாற்.16:20) என்றும், நற்செய்தியாளர் மாற்கு கூறியுள்ளதைக் குறிப்பிட்டு, செயல் என்பதற்கு விளக்கமளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செயல் என்பது, எல்லாவற்றுக்கும் மேலாக, அது ஆண்டவருக்குச் சொந்தமானது, அதேநேரம், மறைப்பணியாளர்கள் என்ற நம் பொறுப்பிலிருந்து இது நம்மை விலக்கிவைக்கவில்லை என்றுரைத்த திருத்தந்தை, நம்மிலிருந்து செயலாற்றுகிறவர் தூய ஆவியாரே என்பதை மறக்கவேண்டாம் என்றும் கூறினார்.

"எங்கள் தகுதி கடவுளிடமிருந்தே வருகிறது" (2 கொரி. 3:5) என்ற புனித பவுலின் கூற்றையும் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த பெருந்தொற்று, எதிர்பார்க்காததை  எதிர்கொள்ள வைத்துள்ளது என்றும், இச்சூழலில், தூய ஆவியாருக்கு எப்போதும் பணிந்திருந்து, நம் வாழ்வும், இறைவார்த்தையும் ஒத்திணங்கிச் செல்லுமாறு வாழவேண்டும் என்றும் கூறினார்.

வரலாற்றில் ஆண்டவரின் நன்மைத்தனத்தின் அடையாளங்களைக் கண்டுணர்ந்து அவற்றை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நாம் பணிகளில் தாழ்ச்சி மற்றும், கனிவு ஆகிய பண்புகள் முக்கியமானவைகளாக அமைதல்வேண்டும், இத்தாலிய கத்தோலிக்க அமைப்பினரும் அவ்வாறு செயல்படுகின்றனர் என்று பாராட்டினார்.

கத்தோலிக்கர்

கத்தோலிக்கர் என்ற சொல்லே, அது உங்களது தனித்துவத்தைக் காட்டுகின்றது, திருஅவையின் மறைப்பணிக்கு எல்லைகள் கிடையாது என்று அது கூறுகிறது என,  அந்த அமைப்பினரிடம் தெரிவித்த திருத்தந்தை, இச்சொல், ஒருவர் தன்னை மற்றவருக்கு நெருக்கமாக வைப்பது என்பதையும் அச்சொல் குறிக்கின்றது, இந்த பெருந்தொற்று காலத்தில், விலகியிருத்தல் விதிமுறைகள், மக்களுக்கிடையே, தலைமுறைகளுக்கு இடையே, பகுதிகளுக்கு இடையே உடன்பிறந்த உணர்வு நெருக்கத்தின் மதிப்பை உணரச் செய்துள்ளது என்று கூறினார்.

இத்தாலியர்

இந்த அமைப்பு, எப்போதும் இத்தாலிய வரலாற்றின் ஓர் அங்கமாக இருந்து, இத்தாலி முழுவதற்கும் நம்பிக்கையை ஊட்டும் கருவியாக, இத்தாலியில் திருஅவைக்கு உதவி வருகின்றது என்றும், இந்த அமைப்பு, திருஅவை சமுதாயம், அனைத்து மக்கள் மத்தியிலும் உரையாடலின் புளிக்காரமாக இருப்பதற்கு உதவமுடியும் என்றும் திருத்தந்தை கூறினார்.

30 April 2021, 16:15