தேடுதல்

Vatican News
மருத்துவப் பணியாளர்களுடன் இறை இரக்க ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை மருத்துவப் பணியாளர்களுடன் இறை இரக்க ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை  (ANSA)

நமக்காக மரணத்தின் வழியே நடந்துசென்ற இயேசு

திருத்தந்தை : நாம் விழுந்ததும் நம்மை மீண்டும் தூக்கி நிறுத்தி, நாம் விசுவாசத்தில் வளர்ந்திட உதவுகிறார் இயேசு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

பாதுகாப்பான இடம் நோக்கி நம்மை வழிநடத்திச் செல்ல, மரணத்தின் வழியே நடந்துசென்ற இயேசு, நாம் விசுவாசத்தில் வளர்ந்திட நமக்கு உதவுகிறார் என ஏப்ரல் 12, இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உயிர்த்த நம் இயேசு, நம் பாதுகாப்பிற்காக, தானே மரணத்தின் வழியே நடந்தது மட்டுமல்ல, நாம் அவரைத் தேடும் முன்னரே நம் அருகில் வருவதுடன், நாம் விழுந்ததும் நம்மை மீண்டும் தூக்கி நிறுத்தி, நாம் விசுவாசத்தில் வளர்ந்திட உதவுகிறார் என தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இரக்கத்தின் ஞாயிறான இஞ்ஞாயிற்றுக்கிழமையன்று நான்கு டுவிட்டர்  செய்திகளை வெளியிட்டிருந்த திருத்தந்தை, இறைவனிடமிருந்து இரக்கத்தைப் பெற்றுள்ள நாம் ஒவ்வொருவரும் இரக்கத்தின் மனிதர்களாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

துயருறுவோருடன் நெருக்கம், சேவை, அக்கறை ஆகியவை வழியாக, இரக்கம், செயல் வடிவம் பெறுகின்றது என்பதை சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி, மன்னிப்பு, மற்றும் இயேசுவின் காயங்களால் நாம் புதுப்பிக்கப்படும்போது, நம் விசுவாசம் உயிர்துடிப்புடையதாகின்றது என மேலும் எடுத்துரைத்து, நாம் பெற்றுள்ள இரக்கத்தை நம் வழியாக, பிறருடனும் பகிர்வோம் என, இந்நான்கு செய்திகளின் வழியே விண்ணப்பித்துள்ளார்.

12 April 2021, 14:00