தேடுதல்

Vatican News
லெபனான் நாட்டு பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள Saad Hariri அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் லெபனான் நாட்டு பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள Saad Hariri அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

திருத்தந்தை, லெபனான் பிரதமர் ஹரிரி சந்திப்பு

லெபனான் நாட்டின் நிலைமைகள் சரியானவுடன், விரைவில் அந்நாட்டிற்கு, திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள ஆவலாக உள்ளேன் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

லெபனான் நாட்டு பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள Saad Hariri அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஏப்ரல் 22, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில், ஏறத்தாழ முப்பது நிமிடங்கள் தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பு குறித்து, செய்தியாளர்களிடம் விவரித்த, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயு புரூனி அவர்கள், மிகவும் இன்னல் நிறைந்த, மற்றும், நிச்சயமற்ற காலக்கட்டத்தில் வாழ்ந்துவருகின்ற லெபனான் மக்களோடு, திருத்தந்தை தனது அருகாமையைத் தெரிவித்தார் என்றும், நாட்டின் நலனுக்காக, அனைத்து அரசியல் சக்திகளும் தங்களையே அர்ப்பணிக்கவேண்டியது மிகவும் உடனடியாகத் தேவைப்படுகின்றது என்று கூறியதாகவும் அறிவித்தார்.

லெபனான் நாட்டின் நிலைமைகள் சரியானவுடன், அந்நாட்டிற்கு, திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள தனக்கிருக்கும் ஆவலை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள திருத்தந்தை, லெபனான் நாடு, உலகளாவிய சமுதாயத்தின் ஒத்துழைப்போடு, மீண்டும், கேதார் மரங்களின் கோட்டையாகவும், சந்திப்பு, நல்லிணக்கம், மற்றும், பன்மைத்தன்மை நிறைந்த நாடாகவும் மாறும் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

லெபனான் குறித்த பன்னாட்டு கருத்தரங்கு

மேலும், லெபனான் நாட்டில், கட்சிகளின் தலையீடுகள் இல்லாத, சுதந்திரமான அரசு உருவாக்கப்படுவது, மற்றும், அந்நாடு குறித்த பன்னாட்டு கருத்தரங்கு நடைபெறுவது, ஆகியவற்றுக்கு, அந்நாட்டு கர்தினால் Beshara Raï அவர்கள் விடுத்துள்ள அழைப்புக்கு, கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்க முதுபெரும்தந்தையர் மற்றும், ஆயர்கள் அவை, தன் ஆதரவை வெளியிட்டுள்ளது.

லெபனானின் Bkerké நகரில், ஏப்ரல் 21, இப்புதனன்று நடைபெற்ற கூட்டத்தில் தங்களின் ஆதரவைத் தெரிவித்த, இந்த அவையினர், லெபனானில் இடம்பெறும் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கும், எந்தவித அரசியல் கட்சிகளின் தலையீடு இல்லாத அரசு உருவாக்கப்படுவதற்கும், உலக அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

2020ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதியிலிருந்து, லெபனானில், முழு அதிகாரத்தையும் கொண்ட ஓர் அரசு உருவாக்கப்படாமல் உள்ளது.

22 April 2021, 15:58