திருத்தந்தை, Equatorial Guinea உதவி அரசுத்தலைவர் சந்திப்பு
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
நாம் வாழ்கின்ற இவ்வுலகின் வருங்காலத்தில், அமைதியை ஏற்படுத்துபவர்களாகவும், எதிர்நோக்கின் சாட்சிகளாகவும் வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 09, இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.
இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் வலைத்தளப் பக்கத்தில் செய்தி ஒன்றை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “மீட்பு மற்றும், உயிர்ப்பின் வருங்காலத்தில், அமைதியை ஏற்படுத்துகின்றவர்களாகவும், எதிர்நோக்கின் சாட்சிகளாகவும் நாம் மாறி, வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்கு, தம்மோடு இணைந்து, ஒத்துழைக்குமாறு ஆண்டவர் நம்மை அழைக்கிறார்” என்று கூறியுள்ளார்.
Equatorial Guinea உதவி அரசுத்தலைவர் சந்திப்பு
மேலும், ஏப்ரல் 09, இவ்வெள்ளிக்கிழமை காலையில், Equatorial Guinea குடியரசின் உதவி அரசுத்தலைவர் Teodoro Nguema Obiang Mangue அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
மத்திய ஆப்ரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள Equatorial Guinea குடியரசு, நிலநடுக்கோடு மற்றும், கினி வளைகுடா ஆகிய இரண்டுக்கும் அருகில் இருப்பதால், இக்குடியரசுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. முதலில் போர்த்துக்கீசியர், பின்னர் இஸ்பானியர்களின் காலனி ஆதிக்கத்தில் இருந்த இக்குடியரசு, 1968ம் ஆண்டில் இஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்றது.
வத்திக்கான் அருங்காட்சியகம், வத்திக்கான் தோட்டம்
அத்துடன், கோவிட்-19 பெருந்தொற்றின் கட்டுப்பாட்டு விதிமுறைகளால், மூடப்பட்டிருந்த வத்திக்கான் அருங்காட்சியகம், மற்றும், வத்திக்கான் தோட்டம், வருகிற மே மாதம் 3ம் தேதியிலிருந்து பார்வையாளர்களுக்குத் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றைக் காண்பதற்கு, இணையதளத்தில் முன்பதிவு செய்திருக்கவேண்டும், மற்றும், கோவிட்-19 விதிமுகறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து வத்திக்கான் அருங்காட்சியகம் மூன்று முறை மூடப்பட்டு, மீண்டும் திறக்கப்படுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்