உரோம் Santo Spirito in Sassia ஆலயத்தில் திருப்பலி
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
உரோம் பெருநகரில், புனித பவுஸ்தீனா கோவால்ஸ்கா மற்றும், திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் ஆகிய இருவரின் புனிதப்பெருள்கள் வைக்கப்பட்டிருக்கும் ஆலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறை இரக்க ஞாயிறன்று திருப்பலி நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 11, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் இறை இரக்க ஞாயிறன்று, உரோம் பெருநகரில் அமைந்துள்ள Santo Spirito in Sassia ஆலயத்தில் திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றுவார் என்றும், அத்திருப்பலியின் இறுதியில் அல்லேலூயா வாழ்த்தொலி உரையையும் வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உரோம் பெருநகரில் இறை இரக்க ஆன்மீகத்தின் மையமாக மாறியுள்ள Santo Spirito in Sassia ஆலயத்தில், உரோம் நேரம் காலை 10.30 மணிக்கு திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலி, அவரது தனிப்பட்ட நிகழ்வு என்றும், இது, தொலைக்காட்சி மற்றும், வத்திக்கான் தகவல் ஊடகத்தின் வழியாக, நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகள் அறிவிக்கப்படுவதற்குமுன், இந்த ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் மாலை மூன்று மணிக்கு இறை இரக்க செபமாலை சொல்லப்படும் என்றும், இதில் மக்கள் பெருமளவில் பங்கேற்பர் என்றும், அந்த ஆலய அதிபர் அருள்பணி Jozef Bart அவர்கள் அறிவித்தார்.
பாஸ்கா கால இரண்டாவது ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் இறை இரக்க ஞாயிறன்று, கடந்த 2020ம் ஆண்டிலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் Santo Spirito in Sassia ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றினார்.
16ம் நூற்றாண்டில் மருத்துவமனை ஆலயமாக எழுப்பப்பட்ட Santo Spirito in Sassia ஆலயத்தை, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 1994ம் ஆண்டில், இறை இரக்க ஆன்மீகத்தைப் பரப்பும் மையமாக மாற்றினார்.
1995ம் ஆண்டில், இறை இரக்க ஞாயிறன்று, இந்த ஆலயத்தைத் தரிசித்த இத்திருத்தந்தை, இந்த ஆலயம், வரலாறு முழுவதும், ஆன்மீக மற்றும், உடல்நோய்களைக் குணமாக்கும் இடமாகப் பணியாற்றும் என்று கூறினார்.