தேடுதல்

'வானக அரசியே'  வாழ்த்தொலி உரை - 180421 'வானக அரசியே' வாழ்த்தொலி உரை - 180421 

திருநற்கருணைக்காக உயிரை தியாகம் செய்த துறவிகள்

திருத்தந்தை: புதிய அருளாளர்களின் எடுத்துக்காட்டு, நாம் இறைவனுக்கு விசுவாசமாக இருக்கவும், நீதியும் உடன்பிறந்த உணர்வும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க உதவவும் நம்மைத் தூண்டுவதாக

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருநற்கருணையை அவமானப்படுத்த முயன்ற பிரெஞ்ச் படைவீரர்களிடமிருந்து அதனைக் காக்கும் பொருட்டு, 200 ஆண்டுகளுக்கு முன்னர், தங்கள் உயிரையும் தியாகம் செய்த, சிஸ்டெர்சியன் சபையைச் சேர்ந்த ஆறு துறவிகள், அவர்கள் வாழ்ந்த அதே இத்தாலிய துறவுமடத்தில் ஏப்ரல் 17, சனிக்கிழமையன்று அருளாளர்களாக அறிவிக்கப்பட்டதை பெருமையுடன் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கோவிட் பெருந்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, கடந்த பல வாரங்களாக தன் நூலக அறையிலிருந்தே ஞாயிறு மூவேளை செப உரைகளையும் புதன் மறைக்கல்வியுரைகளையும் வழங்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 18, ஞாயிறன்று இவ்வாரம், 'வானக அரசியே'  வாழ்த்தொலி உரையை புனித பேதுரு வளாகத்தை நோக்கியிருந்த மேல்மாடி சன்னலிலிருந்து வழங்கினார்.

அவ்வுரையின் இறுதியில், இத்தாலியின் Frosinone நகரில், 6 துறவிகள் அருளாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த மகிழ்ச்சியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.

1799ம் ஆண்டு, இத்தாலியில் நேப்பிள்ஸ் நகரிலிருந்து வெளியேறியபோது, கோவில்களையும் துறவு மடங்களையும் சேதமாக்கிச் சென்ற பிரெஞ்ச் இராணுவத்திடமிருந்து, திருநற்கருணையைக் காப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் தங்கள் உயிரை தியாகம் செய்த துறவி Siméon Cardon, மற்றும், அவருடன் இணைந்து அதே சிஸ்டெர்சியன் துறவு சபையைச் சேர்ந்த 5 துறவியர் ஆகியோரின் எடுத்துக்காட்டு, நாம் இறைவனுக்கு விசுவாசமாக இருக்கவும், நீதியும் உடன்பிறந்த உணர்வும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க உதவவும் நம்மைத் தூண்டுவதாக என கூறினார், திருத்தந்தை.

இத்தாலியின் Frosinone நகரிலுள்ள Casamari சிஸ்டெர்சியன் துறவு இல்லத்தில், ஏப்ரல் 17, இச்சனிக்கிழமையன்று இடம்பெற்ற திருப்பலியில், புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் மார்ச்செல்லோ செமராரோ அவர்கள், இந்த ஆறு துறவிகளை அருளாளர்களாக அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 April 2021, 13:15