தேடுதல்

Vatican News
காஸ்தெல்லோ நகரின் அருளாளர் மார்கிரேட் காஸ்தெல்லோ நகரின் அருளாளர் மார்கிரேட் 

காஸ்தெல்லோ அருளாளர் மார்கிரேட், புனிதர்கள் பட்டியலில்

இறை ஊழியர் Enrique Ernesto Shaw அவர்கள், ஒரு தொழிலதிபர். சிறந்த எழுத்தாளராகிய இவர், பல நூல்களை வெளியிட்டுள்ளார். கிறிஸ்தவ தொழில் அதிபர்கள் கழகத்தையும் இவர் ஏற்படுத்தினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மறையுரையாளர்கள் மூன்றாம் சபையைச் சார்ந்த, காஸ்தெல்லோ நகரின் அருளாளர் மார்கிரேட் அவர்கள் பெயரை, புனிதர்கள் பட்டியலில் இணைக்கவும், அவர்களின் பக்தி முயற்சி உலகளாவியத் திருஅவையில் இடம்பெறவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தீர்மானித்துள்ளார் என்று, ஏப்ரல் 24, இச்சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புனிதர், மற்றும் அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் உறுப்பினர்கள், மற்றும், கர்தினால்கள், ஆயர்கள், ஆகியோரோடு நடத்திய கூட்டத்திற்குப்பின், திருத்தந்தை இவ்வாறு தீர்மானித்துள்ளார் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

காஸ்தெல்லோ நகரின் அருளாளர் மார்கிரேட் அவர்கள், 1287ம் ஆண்டில் இத்தாலியின் மெத்தோலாவில் பிறந்தார். இவர், 1320ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி, இத்தாலியின் காஸ்தெல்லோ நகரில் இறைபதம் சேர்ந்தார்.

ஐந்து இறைஊழியர்கள்

இன்னும், புனிதர் மற்றும் அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் மார்செல்லோ செமெராரோ (Marcello Semeraro) அவர்கள், ஏப்ரல் 24, இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, ஐந்து இறைஊழியர்கள் மற்றும், 12 மறைசாட்சிகளின் புண்ணிய வாழ்வு குறித்த சிறப்பு விவரங்களை சமர்ப்பித்தார்.

உலக மீட்பர் சபையைச் சார்ந்த இறை ஊழியர் Vincenzo Nicasio Renuncio Toribio, மற்றும், அவரோடு சேர்ந்த 11 தோழர்களும், இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில், 1936ம் ஆண்டில், கிறிஸ்தவ நம்பிக்கைக்காக மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர்.

இத்தாலியர்களான இறை ஊழியர்களான கர்தினால் Pietro Marcellino Corradini, அருள்சகோதரி Emanuele Stablum, பொதுநிலை விசுவாசி Anfrosina Berardi ஆகியோரது புண்ணிய வாழ்வு குறித்த சிறப்பு விவரங்களை திருத்தந்தை அங்கீகரித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் பாரிசில் 1921ம் ஆண்டு பிறந்து அர்ஜென்டீனா நாட்டின் Buenos Aires நகரில் 1962ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்த இறை ஊழியர் Enrique Ernesto Shaw அவர்கள், ஒரு தொழிலதிபர். சிறந்த எழுத்தாளராகிய இவர், பல நூல்களை வெளியிட்டுள்ளார். கிறிஸ்தவ தொழில் அதிபர்கள் கழகத்தையும் இவர் ஏற்படுத்தினார்.

இஸ்பெயின் நாட்டவரான இறை ஊழியர் María de los Desamparados Portilla Crespo அவர்கள், ஒரு குடும்பத்தின் அன்னை. Valenciaவில் 1925ம் ஆண்டில் பிறந்த இவர், மத்ரித்தில் 1996ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்தார்.

24 April 2021, 15:09