தேடுதல்

Vatican News
பெரு நாட்டில், குழந்தைகளுக்காகப் பணியாற்றிய Nadia De Munari பெரு நாட்டில், குழந்தைகளுக்காகப் பணியாற்றிய Nadia De Munari 

பெரு நாட்டில் கொல்லப்பட்ட Nadia De Munari

மக்கள் பணியில், குறிப்பாக, சமுதாயத்தில் மிகவும் நலிவுற்றோரின் பணியில் ஈடுபட்டிருப்போர் வன்முறைகளுக்கு உள்ளாவது மிகவும் கண்டிக்கத்தக்கது - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நற்செய்தியைப் பறைசாற்றும் பணியில் தங்கள் உயிரை இழந்தோர், குறிப்பாக, எவ்வித பாதுகாப்பும் இன்றி, இப்பணியில் ஈடுபட்டு, அதன் விளைவாக உயிரிழந்தோர் தன் இறைவேண்டலில் இருப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெரு நாட்டிற்கு அனுப்பிய தந்திச் செய்தியில் கூறியுள்ளார்.

பெரு நாட்டில், Mato Grosso என்ற அமைப்பில் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றிய Nadia De Munari என்ற 50 வயதுள்ள இத்தாலியப் பெண்மணி, கடந்த வாரம் புதனன்று தாக்கப்பட்டு, சனிக்கிழமை மரணமடைந்தார். அவரது, அடக்கத்தையொட்டி, திருத்தந்தை அனுப்பியிருந்த தந்திச் செய்தியில், வன்முறையின் பல வடிவங்களை வன்மையாகக் கண்டனம் செய்துள்ளார்.

மக்கள் பணியில், குறிப்பாக, சமுதாயத்தில் மிகவும் நலிவுற்றோரின் பணியில் ஈடுபட்டிருப்போர் வன்முறைகளுக்கு உள்ளாவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ள திருத்தந்தை, இந்த தொண்டரின் அடக்கத்தில், பெரு நாட்டில் கலந்துகொள்வோருடனும், விரைவில், இவரது நினைவாக இத்தாலியில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்வோருடனும், தான், நினைவால், இதயத்தால் ஒன்றித்திருப்பதாக கூறியுள்ளார்.

இத்தாலியின் Schio எனுமிடத்தில் பிறந்த நாதியா அவர்கள், Mato Grosso என்ற அமைப்பில் இணைந்து, பெரு நாட்டில் பணியாற்றச் சென்றார். அங்கு, குழந்தைகளின் கல்வியில் தன்னையே ஈடுபடுத்திக்கொண்ட நாதியா அவர்கள், தன் 50வது வயதில் வன்முறைகளுக்கு உள்ளாகி, மரணமடைந்தார்.

தென் கொரியாவின் சோல் (Seoul) பெருமறைமாவட்டத்தின் முன்னாள் பேராயராகப் பணியாற்றிய கர்தினால் நிக்கோலஸ் சோங் ஜின்-சுக் (Nicholas Cheong Jin-suk) அவர்கள், ஏப்ரல் 27, இச்செவ்வாயன்று, தன் 89வது வயதில் இறையடி சேர்ந்தார்.

மேலும், ஏப்ரல் 27, இச்செவ்வாயன்று, தன் 89வது வயதில் இறையடி சேர்ந்த சோல் (Seoul) பெருமறைமாவட்டத்தின் முன்னாள் பேராயராகப் பணியாற்றிய கர்தினால் நிக்கோலஸ் சோங் ஜின்-சுக் (Nicholas Cheong Jin-suk) அவர்களின் மரணத்தையொட்டி, தன் அனுதாபங்களை வெளியிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தந்திச் செய்தியொன்றை, சோல் பெருமறைமாவட்டத்தின் பேராயர், மற்றும், மக்களுக்கு அனுப்பியுள்ளார்.

29 April 2021, 14:11