தேடுதல்

Vatican News
வத்திக்கான் விளையாட்டு வீரர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 2020 வத்திக்கான் விளையாட்டு வீரர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 2020 

விளையாட்டு உலகநாள் – திருத்தந்தையின் விண்ணப்பம்

குழுவாக இணைந்து மேற்கொள்ளப்படும் விளையாட்டுக்கள், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் இனங்களிடையே, புரிதலையும், உரையாடலையும் வளர்க்கும் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குழுவாக இணைந்து மேற்கொள்ளப்படும் விளையாட்டுக்கள், பல்வேறு கலாச்சாரங்கள், மற்றும் இனங்களிடையே, புரிதலையும், உரையாடலையும் வளர்க்குமென்று தான் நம்புவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் கூறினார்.

முன்னேற்றம் மற்றும் அமைதிக்காக விளையாட்டு உலகநாளை, ஐ.நா. நிறுவனம் உருவாக்கி, ஒவ்வோர் ஆண்டும், ஏப்ரல் 6ம் தேதி, அதைச் சிறப்பித்து வருகிறது என்று கூறிய திருத்தந்தை, இந்த உலக நாளையொட்டி, தன் கருத்துக்களையும், விண்ணப்பத்தையும் தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் பதிவுசெய்தார்.

வத்திக்கான் விளையாட்டு வீரர்கள்

வத்திக்கான் விளையாட்டு வீரர்கள் வழியே, உடன்பிறந்த நிலையை உருவாக்கும் கலாச்சாரம் உலகெங்கும் பரவுவதையும், குறிப்பாக, மிகவும் வலுவற்றோர் மீது தனி கவனம் செலுத்தி, உலக அமைதியை வளர்ப்பதையும் தான் அதிகமாக ஊக்குவிக்க விரும்புவதாக திருத்தந்தை தன் விண்ணப்பத்தில் கூறினார்.

அருள்பணியாளர்கள், அருள்பணித்துவ பயிற்சியில் இருப்போர், அருள் சகோதரிகள், சுவிஸ் பாதுகாப்பு வீரர்கள், வத்திக்கானின் பல்வேறு துறைகளில் பணியாற்றுவோர் ஆகியோரைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள  வத்திக்கான் விளையாட்டு வீரர்கள் அணி, இத்தாலிய ஒலிம்பிக் குழுவால், 2019ம் ஆண்டு, சனவரி மாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஐ.நா. தலைமைப் பொதுச்செயலரின் செய்தி

முன்னேற்றம் மற்றும் அமைதிக்காக விளையாட்டு உலகநாள், ஏப்ரல் 6, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட, ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், மக்களை ஒன்றாக இணைப்பதற்கும், நலவாழ்வை வழங்கும் வாழ்வுமுறையை வளர்ப்பதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும் பல்வேறு விளையாட்டுக்கள் துணை செய்கின்றன என்று கூறினார்.

உலக அளவில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள், மாற்றுத்திறன் கொண்டோரின் ஒலிம்பிக் விளையாட்டுக்கள், உலக கால்பந்தாட்டம் ஆகிய நிகழ்வுகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாமலும், இந்நிகழ்வுகளுக்காக உழைப்போரின் உரிமைகள் பாதிக்கப்படாமலும் நிகழ்வதை அரசுகளும், உலக நிறுவனங்களும் உறுதி செய்யவேண்டும் என்று கூட்டேரஸ் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டார்.

அமைதி, நலவாழ்வுக்கு விளையாட்டுக்கள்

அமைதி நிறைந்த, நலவாழ்வை வளர்க்கும் வாழ்வுமுறை கொண்ட உலகை உருவாக்க விளையாட்டுக்கள் அவசியம் என்ற கருத்தை வலியுறுத்த, 2013ம் ஆண்டு, ஐ.நா. நிறுவனத்தின் பொது அவை, முன்னேற்றம் மற்றும் அமைதிக்காக விளையாட்டு உலகநாளை உருவாக்கியது.

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 6ம் தேதி சிறப்பிக்கப்படும் இந்த உலகநாள், இவ்வாண்டு, கோவிட் பெருந்தொற்று காரணமாக, இணையவழி மெய்நிகர் நிகழ்வுகள் வழியே சிறப்பிக்கப்பட்டது.

07 April 2021, 16:08