தேடுதல்

Santo Spirito in Sassia கோவிலில் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் Santo Spirito in Sassia கோவிலில் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ்  

இறைஇரக்க ஞாயிறு - திருத்தந்தையின் மறையுரை

திருத்தந்தை : உயிர்த்த இயேசு, தன் சீடர்களுக்கு அமைதி, தூய ஆவியார், தன் காயங்கள் என மூன்று கொடைகளை வழங்கினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

உயிர்த்த இயேசு தன் சீடர்களுக்குத் தோன்றி, அவர்களின் கலக்கமுற்றிருந்த இதயங்களுக்கு ஆறுதலை வழங்கியதுடன், அவர்களுக்குள் உயிர்ப்பை உருவாக்கினார் என தன் மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைஇரக்கத்தின் ஞாயிறையொட்டி, ஏப்ரல் 11, ஞாயிறன்று, வத்திக்கானுக்கு அருகில், இறைஇரக்கத்தின் ஆண்டவர் கோவில் என அறியப்படும், Santo Spirito in Sassia கோவிலில் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்த்தபின் தன் சீடர்களுக்கு பலமுறை காட்சியளித்த இயேசு, அவர்களின் மனநிலைகளில் ஊக்கமளித்து அவர்களின் வாழ்வு மாறுவதற்கு உதவினார் என்று கூறினார்.

ஏற்கனவே தான் கூறிய வார்த்தைகளும் தன் நடவடிக்ககைகளும் தன் சீடர்களிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லையென்பதை அறிந்திருந்த இயேசு,  தன் உயரிப்பின் வழியாக, அவர்களை இரக்கத்தில் மேலே எழுப்புகிறார், அவர்களும் தாங்கள் பெற்றுக்கொண்ட இரக்கத்தினால் இரக்கமுடையவர்களாக மாறினர் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு தன் சீடர்களுக்கு அமைதி, தூயஆவியார், தன் காயங்கள், என, மூன்று கொடைகளை வழங்கினார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவை, தனியாக விட்டு ஓடி ஒளிந்ததோடு, கவலையாலும்,  தாங்களும் துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தாலும், அறையில் அடைபட்டுக் கிடந்த சீடர்களை நோக்கி இயேசு கூறும் வார்த்தைகள்,  உங்களுக்கு அமைதி உரித்தாகுக, என்பதே எனச் சுட்டிக்காட்டினார்.

“உங்களுக்கு அமைதி உரித்தாகுக! என தன் சீடர்களை நோக்கி உரைத்த, உயிர்த்த இயேசு, அதனோடு, தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் (யோவா 20:21) எனக்கூறி, அவர்களை உள்மனச் சங்கிலிகளிலிருந்து விடுவித்து, அவர்களுக்குரிய பணியையும் வழங்கினார் இயேசு என்றுரைத்த திருத்தந்தை, நமக்கும் விடுதலை வழங்கும் இயேசு, நம்மிலும் சீடருக்குரிய பணியை எதிர்பார்க்கிறார் என எடுத்துரைத்தார்.

தன்னை கைவிட்டு ஓடியவர்களை குற்றம்சாட்டாமல், அவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்து அவர்களிடம் மறைபரப்புப் பணியை ஒப்படைத்த இயேசுவுக்கு நாம் அனைவரும் முக்கியத்துவம் நிறைந்தவர்கள், ஏனெனில் அவரைப் பொருத்தவரையில், பயனற்றவர்கள் என்று எவரும் இல்லை என, மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கலங்கியிருந்த இதயங்களுக்கு முதலில் அமைதியை வழங்கிய உயிர்த்த இயேசு, அவர்களுக்கு இரக்கத்தை வழங்குவதன் அடையாளமாக தூயஆவியாரை, பாவ மன்னிப்பிற்கான கொடையாக அளித்து, அவர்களின் பாவ மனவுறுத்தல்களிலிருந்து விடுதலை வழங்கியதை நினைவில் கொண்டவர்களாக, இரக்கம் எனும் கொடைக்காக இறைவேண்டல் செய்து, ஒப்புரவு எனும் அருளடையாளம் வழி, இறை இரக்கத்தையும், மன்னிப்பையும் பெறுவோம் என விண்ணப்பித்தார் திருத்தந்தை.

அமைதியை தந்து நமக்கு புது வாழ்வை வழங்கியும், மன்னிப்பின் வழியாக நம் மனநிலைகளை உயர்த்தியும் உள்ள இயேசு, இரக்கத்தின் மூன்றாவது கொடையாக, தன் காயங்களைக் காண்பிக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர் தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள் (1 பேதுரு 2:24; எசா 53:5).  என்று, தூய பேதுருவும் இறைவாக்கினர் எசாயாவும் கூறிய வார்த்தைகளை நினைவுறுத்தி, காயங்களால் எவ்வாறு குணம்பெறமுடியுமென்ற கேள்வியையும் முன்வைத்தார்.

நம் காயங்களையும் பலவீனங்களையும் தன் உடலில் சுமந்து, தன் அன்பை வெளிப்படுத்திய இறைவனின் காயங்கள், நமக்கும் அவருக்கும் இடையே இணைப்புச் சங்கிலியாக இருந்து, நமக்குள்ளிருக்கும் இருளை அகற்றுவதற்கு உதவும் வகையில், நாமும் புனித தோமாபோல் அவரின் காயங்ககளைத் தொட்டு, என் ஆண்டவரே என் கடவுளே (யோவா 20:28).  என அறிக்கையிட்டு, நம் கிறிஸ்தவப் பயணத்தைத் துவக்குவோம், என உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

விண்ணரசில் தங்களுக்கு எந்த இடமென தங்களுக்குள்ளேயே விவாதம் செய்த அதே சீடர்கள் (மத் 10:37; லூக் 22:24), இயேசுவின் இரக்கத்தைப் பெற்றபின் தாங்களும் இரக்கமுள்ளவர்களாக மாறி, தங்களுக்குரியதையெல்லாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டதுடன், மன்னிப்பையும் கையிலேந்தி, தாங்கள் தொட்ட இயேசுவின் காயங்களின் துணைகொண்டு, மற்றவர்களின் காயங்களையும் குணப்படுத்துபவர்களாக மாறினர் என, மறையுரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் காயங்களால் தொடப்பட்டுள்ள நாம், பிறர் காயங்களைக் குணப்படுத்த, நம்மையேத் தாழ்த்தியுள்ளோமா என்பது குறித்த கேள்வியை நமக்குள்ளேயே இன்று எழுப்புவோமென்ற விண்ணப்பத்தை முன்வைத்த திருத்தந்தை, இரக்கத்தைப் பெற்றுள்ள நாம் இரக்கமுள்ளவர்களாக மாறியுள்ளோமோ, இறைவனின் உடலை உண்டு பலம்பெற்றுள்ள நாம், பிறரின் பசியை போக்க உதவியுள்ளோமா, என ஆன்ம சோதனைச் செய்வதுடன், இரக்க நடவடிக்கைள் இல்லாத விசுவாசமும் அன்பும் பயனற்றவை என்பதை உணர்வோம் என கேட்டுக்கொண்டார்.

விசுவாசம் என்பது ஒருவழிப் பாதையல்ல, அது, நாம் பெற்ற இரக்கத்தையும், அமைதியையும், மன்னிப்பையும், இயேசுவின் காயங்களையும் பிறருடன் பகிர்ந்து, இரக்கத்தின் நற்செய்தியை பிறருக்கு அறிபவிக்கும் பலத்தை நமக்கு வழங்கட்டும் என வேண்டுவோம் என தன் இறைஇரக்க ஞாயிறு மறையுரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 April 2021, 12:02