தேடுதல்

Vatican News
புனித எண்ணெய் அர்ச்சிப்பு திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் புனித எண்ணெய் அர்ச்சிப்பு திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

புனித எண்ணெய் அர்ச்சிப்பு திருப்பலி - திருத்தந்தை மறையுரை

திருத்தந்தை பிரான்சிஸ்: இயேசுவின் நற்செய்தியையும், அத்துடன் இணைந்துவரும் சிலுவையையும் அரவணைப்பதற்கு இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.

ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 1, புனித வியாழன் காலை 10.00 மணிக்கு, வத்திக்கான், புனித பேதுரு பெருங்கோவிலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணித்துவ விழாவையும், புனித எண்ணெய் அர்ச்சிப்பையும் இணைத்து, திருப்பலி நிறைவேற்றிய வேளையில், அவர் வழங்கிய மறையுரையின் சுருக்கம் இதோ:

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இன்றையத் திருப்பலியில் வாசிக்கப்பட்ட நற்செய்தியில், இயேசு தன் பணிவாழ்வை, நாசரேத்தில் துவங்கியபோது கூறிய சொற்களைக் கேட்டோம். இயேசுவின் சொற்கள், தொழுகைக்கூடத்தில் இருந்தோரின் இதயத்தில் மாற்றங்களை உருவாக்கின.

பாராட்டுரையும், பழிப்புரையும்

“இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” (லூக். 4:22) என்று ஒருவர் கூறியது, விரைவில் அந்த தொழுகைக்கூடத்தில் பரவியது. இந்தச் சொற்கள், இயேசுவைப் பாராட்டுவதற்காகக் கூறப்பட்ட சொற்களாகக் கருதலாம், அல்லது, அவரை பழித்துரைக்கக் கூறப்பட்ட சொற்களாகக் கருதலாம்.

இதையொத்த ஒரு கூற்றை, திருத்தூதர்கள் பணிகள் நூலிலும் நாம் கேட்கிறோம். “இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா?" (தி.ப. 2:7) என்ற இச்சொற்களையும் பாராட்டுரையாக, அல்லது, பழிப்புரையாகக் கருதலாம்.

சிலுவை வரையிலும் தொடர்ந்த நஞ்சு

பொதுவாக, தனக்கு எதிராகக் கூறப்படும் சொற்களுக்கு பதிலிருக்காத இயேசு, நாசரேத்து தொழுகைக்கூடத்தில் கூறப்பட்ட சொற்களுக்கு பதில் கூறுகிறார்: “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்’ எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்." (லூக். 4:23)

‘உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்...’ அல்லது, “இவன் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும்” என்ற சொற்களில் நஞ்சு கலந்துள்ளது! இந்தச் சொற்கள், சிலுவை வரையிலும் ஆண்டவரைத் தொடர்ந்தன. “பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும்” (லூக். 23:35)

நற்செய்தியும், சிலுவையும்

நற்செய்தியை அறிவிப்பது, எப்போதும் சிலுவையுடன் தொடர்பு கொண்டுள்ளது. இறை வார்த்தை, நல்மனம் கொண்டோரில் ஒளிவீசுகிறது, ஆனால், மற்றவர்களிடம் குழப்பத்தையும், மறுப்பையும் கொணர்கிறது. இதை, நாம் நற்செய்திகளில் அடிக்கடி காண்கிறோம்.

நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் நூறு, அறுபது, முப்பது மடங்கு பயன் தருகின்றன, ஆனால், பொறாமையினால், பகைவன் களைகளை இரவில் விதைத்துச் செல்கிறான் (காண்க. மத். 13:24-30,36-43).

காணாமல் போன மகன் மீது தந்தை காட்டிய பரிவு, மூத்த மகனின் கோபத்தைத் தூண்டுகிறது (காண்க. லூக். 15:11-32).

இயேசு, சக்கேயு, மத்தேயு ஆகியோரின் இல்லங்களில் விருந்துண்டு, அவர்கள் உள்ளங்களை கவர்ந்தபோது, தங்களையே நேர்மையாளர்கள் என்று எண்ணி வந்தோர், இயேசுவை பழித்துப் பேசினர்.

இவ்வாறு, நற்செய்தியின் அறிவிப்பு, புரிந்துகொள்ளமுடியாத வழியில், துன்பத்துடனும், சிலுவையோடும் இணைக்கப்பட்டுள்ளது.

லொயோலாவின் புனித இஞ்ஞாசியார், ஆண்டவரின் பிறப்பு குறித்த தியானத்தில், "ஆண்டவரின் பிறப்புக்கு முன்னதாக, மரியாவும், யோசேப்பும் மேற்கொண்ட பயணத்தை எண்ணிப்பார்ப்பேன். ஆண்டவர், மிக அதிகமான ஏழ்மையில் பிறந்து, பசி, தாகம், துன்பங்களை அடைந்து, சிலுவையில் இறந்ததை, இவை அனைத்தையும் எனக்காக ஏற்றுக்கொண்டதை எண்ணிப்பார்ப்பேன்" என்று கூறும் புனித இஞ்ஞாசியார், "இவ்வாறு சிந்தித்து, இதிலிருந்து ஆன்மீகப் பயனைப் பெறுவேன்" (ஆன்மீகப் பயிற்சிகள் 116) என்ற அழைப்பை விடுக்கிறார்.

இயேசுவின் பிறப்பைச் சிந்திக்கும்போதே, சிலுவையைப்பற்றி சிந்திப்பதால் என்ன பயன்?

இரு எண்ணங்கள்

இரு எண்ணங்கள் எனக்குத் தோன்றுகின்றன.

முதலில்: ஆண்டவர் பிறப்புக்கு முன்பிருந்து, அவரது பணிவாழ்வின் இறுதிவரை, சிலுவை தொடர்ந்தது. ஏரோது மன்னனின் வன்முறை, திருக்குடும்பம் சந்தித்த பிரச்சனைகள் ஆகியவை, சிலுவையின் இருப்பை உணர்த்துகின்றன.

சிலுவை, இயேசுவின் வாழ்வில் எதேச்சையாக நுழையவில்லை, மாறாக, துவக்கத்திலிருந்தே அவர் வாழ்வின் அங்கமானது. எனவே, தன் பாடுகளின்போது, அவர் சிலுவையை முழுமையாக ஏற்றுக்கொண்டார்.

இரண்டாவது எண்ணம்: சிலுவை, மனிதநிலையின் பிரிக்கமுடியாத அங்கமாக இருந்தாலும், அந்தச் சிலுவையிலும், 'உன்னையே காப்பாற்றிக்கொள்' என்ற நஞ்சை தீயோன் இயேசுவிடம் புகுத்த முயற்சி செய்கிறான்.

இயேசுவின் நற்செய்தியையும், அத்துடன் இணைந்துவரும் சிலுவையையும் அரவணைப்பதற்கு இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.

"நாமோ பின்வாங்கிச் சென்று அழிவுறுவோர் அல்ல." (எபிரேயர் 10:39) என்ற அறிவுரையை எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் வழங்குகிறார். எனவே, கிறிஸ்துவைப்போல, நாமும், சிலுவையால் இடறல்படாமல், அதில் நம் மீட்பைக் காண்கிறோம்.

இவ்வாறு, தன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில், தன் சொந்த வாழ்வில் ஏற்பட்ட ஓர் அனுபவத்தின் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

என் வாழ்வின் இருள்நிறைந்த நேரத்தில்...

ஒருமுறை, என் வாழ்வின் இருள்நிறைந்த நேரத்தில், அந்தச் சூழலிலிருந்து என்னை விடுவிக்கும்படி, இறைவனின் அருளைக் கேட்டேன். அவ்வேளையில், அருள் சகோதரிகளை, ஆன்மீகப் பயிற்சிகளில் வழிநடத்திக்கொண்டிருந்தேன். இறுதி நாளன்று, அச்சகோதரிகள் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற்றுக்கொண்டிருந்தனர். அவர்களில், தெளிவான, ஒளிமிகுந்த கண்களைக் கொண்டிருந்த, வயதில் முதிர்ந்த ஒரு சகோதரி, ஒப்புரவு அருள் அடையாளம் பெறுவதற்கு வந்தார். அந்த அருள் அடையாளத்தை நிறைவு செய்த வேளையில், நான் அச்சகோதரியிடம், "சகோதரியே, எனக்கு ஒரு குறிப்பிட்ட வரம் தேவையாக உள்ளது. அதற்காக நீங்கள் செபியுங்கள்" என்று கூறினேன். உடனே, அச்சகோதரி மெளனமாக செபித்தார். அதன் இறுதியில் அவர் என்னிடம், 'இறைவன் நீர் விரும்பும் வரத்தை உறுதியாகத் தருவார்: ஆனால், அதை, அவரது வழியில் அவர் தருவார், அதை நினைவில் கொள்ளுங்கள்' என்று கூறினார். அச்சகோதரி கூறிய சொற்கள், எனக்கு பெரும் சக்தியை அளித்தது. இறைவன் நாம் கேட்பதை நமக்கு எப்போதும் தருகிறார், ஆனால், அதை அவரது வழியில் தருகிறார். அந்த வழி, சிலுவையை உள்ளடக்கியது.

இவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித வியாழன் காலை நிறைவேற்றிய திருப்பலியில், தன் மறையுரை சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

01 April 2021, 12:12