தேடுதல்

Vatican News
Paganica ஏழை கிளாரிஸ்ட் துறவு சபையின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் Paganica ஏழை கிளாரிஸ்ட் துறவு சபையின் அங்கத்தினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

அருளாளர் தேவசகாயம் உட்பட ஏழு புதிய புனிதர்கள்

பல்வேறு துயர்கள் மத்தியிலும், இறைவன், மற்றும் உடன்பிறந்த அன்பின் துணையுடன் நாம் உயர்ந்தெழ முடியுமென்பதை காண்பித்த ஏழை கிளாரிஸ்ட் அருள்சகோதரிகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் வானொலி

அருளாளர் தேவசகாயம் உட்பட, திருஅவையின் ஏழு அருளாளர்களை, புனிதர்களாக உயர்த்துவது, அதற்குரிய நாளை நிர்ணயிப்பது, ஆகியவை குறித்து விவாதிக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே மாதம் 3ம் தேதியன்று, கர்தினால்கள் அவையை கூட்ட உள்ளதாக, ஏப்ரல் 26, இத்திங்களன்று, திருப்பீடம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மறைசாட்சியாக  கொல்லப்பட்ட அருளாளர் தேவசகாயம் அவர்கள் உட்பட, 7 பேருக்கு புனிதர் பட்டம் வழங்குவது குறித்து கலந்துபேசும் கர்தினால்கள் அவை இடம்பெற உள்ளது.

இந்த ஏழு அருளாளர்களுள் தேவசகாயம் மட்டுமே பொதுநிலையினர், ஏனைய 6 பேரில், நால்வர் அருள்பணியாளர்கள், மற்றும், இருவர் பெண்துறவிகள்.

மேலும், ஏப்ரல் 26, இத்திங்களன்று, இத்தாலியின் L'Aquila மலைப்பகுதியில் வாழும்  Paganica ஏழை கிளாரிஸ்ட் துறவு சபையின் அங்கத்தினர்களை வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இறைவேண்டல் வழியாக, அவர்கள், தனக்கு உதவி வருவதற்கு நன்றி தெரிவித்தார்.

தனக்காக இத்துறவு சபையினர் தொடர்ந்து இறைவேண்டல் செய்துவருவதையும், தான் தங்கியிருக்கும் இல்லத்திலுள்ள சாந்தா மார்த்தா சிற்றாலயத்திற்கு பாஸ்கா மெழுகுதிரியை கொடையாக வழங்கி, அக்கோவிலை அலங்கரித்ததையும் குறிப்பட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைக் காண வந்திருந்த அச்சகோதரிகள் ஒவ்வொருவரையும் தன் இதயத்திலிருந்து வாழ்த்துவதாகத் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு இத்தாலியின் L'Aquila பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால், Paganica துறவு இல்லம் சேதமாகியதையும் அவ்வில்லத் தலைவி, அருள்சகோதரி Gemma Antonucci அவர்கள், இடிபாடுகளுக்கிடையில் சிக்கி உயிரிழந்ததையும், அருள்சகோதரிகள் பலர் படுகாயமுற்றதையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மண்ணுக்குள் மடியும் விதை, தளிர்விட்டு வளர்ந்து கனி தருவதுபோல், இத்துறவு இல்லமும் மீண்டு வந்துள்ளதைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

இத்துறவு சபையினர் எண்ணற்றத் துயர்களை சந்தித்தாலும், வானகத் தந்தையின் அன்புடன் கூடிய அக்கறையையும், எண்ணற்ற மக்களின் ஒருமைப்பாட்டுணர்வையும் வாழ்வில் அனுபவித்து வருவதையும், ஏழை கிளாரிஸ்ட துறவு சபை சகோதரிகளிடம் சுட்டிக்காட்டினார்  திருத்தந்தை.

2009ம் ஆண்டின் நிலநடுக்கத்தின்போது, அந்த இரவில், இறைவனையும் உடன் பிறந்த அன்பையும் தவிர அனைத்தையும் இழந்த இத்துறவு சபை சகோதரிகள், துணிவுடன் எழுந்து வந்து, முதல் பத்து ஆண்டுகளை ஒரு தற்காலிக இடத்திலும், பின்னர் தங்களின் புதுப்பிக்கப்பட்ட துறவு இல்லத்திலும் வாழ்ந்து வருவது மட்டுமல்ல, 12 இளம்பெண்கள் இத்துறவு சபையின் அங்கத்தினர்களாக புகுந்து, இச்சபை துளிர்விட்டு வளர்ந்து வருவது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பல்வேறு துயர்கள் மத்தியிலும், இறைவன், மற்றும் உடன்பிறந்த அன்பின் துணையுடன் நாம் உயர்ந்தெழ முடியுமென்பதை ஏழை கிளாரிஸ்ட அருள்சகோதரிகள் உலகிற்கு காண்பித்துள்ளனர் என தன் உரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எச்சூழலிலும் இறைவேண்டல் செய்வதில் மனம் தளராதீர்கள், என அத்துறவு சபை சகோதரிகளை நோக்கி அழைப்புவிடுத்த திருத்தந்தை, அசிசியின் புனித கிளாரா, மற்றும் புனித பிரான்சிஸ் ஆகியோரிடமிருந்து பெற்ற தனிவரங்களின் பலத்துடன் முன்னோக்கி நடக்குமாறு விண்ணப்பித்து, அவர்களுக்கு தன் ஆசீரையும் அளித்தார்.

அத்துடன், இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாம் நமக்கு அடுத்திருப்பவருக்காக காத்திருக்காமல், அவர்களுக்கு நன்மை செய்வதிலும், அவர்களை மதிப்பதிலும், நாமே முதலில் முன்வருவோம், என எழுதியுள்ளார்.

26 April 2021, 14:44