தேடுதல்

வன்முறைகளை சந்தித்துவரும் கொலம்பியா வன்முறைகளை சந்தித்துவரும் கொலம்பியா  

கொலம்பிய மக்களோடு திருத்தந்தையின் நெருக்கம்

கொலம்பியாவில் அமைதியைக் கட்டியெழுப்ப, அந்நாட்டின் திருஅவைப் பணியாளர்கள் ஆற்றிவரும் சிறப்புப்பணிகள் குறித்து திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

வன்முறைகளால் பெருந்துயர்களை அனுபவிக்கும் கொலம்பியாவின் தென்பகுதி மக்களோடு திருத்தந்தையின் நெருக்கத்தை வெளியிடும் தந்திச் செய்தி ஒன்று அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

துயருறும் மக்கள் குறித்த ஆழ்ந்த கவலையையும், மக்களோடு திருத்தந்தையின் நெருக்கத்தையும் வெளியிட்டு, திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் அனுப்பப்பட்டுள்ள தந்திச் செய்தியில், கொலம்பியாவின் தென்பகுதியில் இடம்பெறும் வன்முறைகள் குறித்த வன்மையான கண்டனமும் வெளியிடப்பட்டுள்ளது.

கொலம்பிய ஆயர் பேரவைத் தலைவர், Villavicencio பேராயர் Oscar Urbina Ortega அவர்களுக்கு திருத்தந்தையின் பெயரால் அனுப்பப்பட்டுள்ள இச்செய்தி, கொலம்பியாவின் தென்பகுதி முழுவதிலும் அமைதியைக் கட்டியெழுப்ப, அந்நாட்டின் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார், மற்றும் பொதுநிலையினர் ஆற்றிவரும் சிறப்புப் பணிகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.

வன்முறைகளைச் சந்தித்துவரும் கொலம்பியாவில் 1960ம் ஆண்டுகளிலிருந்து இதுவரை ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளனர்.

கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2020ம் ஆண்டில், நலப்பணியாளர்கள் மீது 325 தாக்குதல்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பெருந்தொற்றால் 25 இலட்சத்து நாலாயிரத்து 206 பேர் பாதிக்கப்பட்டும், 65,283 பேர் உயிரிழந்தும் உள்ள நிலையில், நலப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் தடுப்பூசிப் பணிகளை பெரிய அளவில் பாதித்துள்ளன.

ஏழைகளின் உரிமைகளுக்காக அவர்களுடன் இணைந்து போராடிவரும் கத்தோலிக்க அருள்பணியாளர்களும், துறவறத்தாரும் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் இடம்பெற்று வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 April 2021, 15:13