தேடுதல்

கர்தினால் Sebastian Koto Khoarai கர்தினால் Sebastian Koto Khoarai  

கர்தினால் Khoaraiன் ஆன்மா நிறையமைதியடைய செபம்

லெசோத்தோ நாட்டின் முதல் கர்தினால் Khoarai அவர்களின் இறப்போடு, தற்போது திருஅவையில் 88 நாடுகளைச் சார்ந்த கர்தினால்கள் உள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கடந்த வார இறுதியில் இறைவனடி சேர்ந்துள்ள, லெசோத்தோ (Lesotho) நாட்டின் முதல் கர்தினால் Sebastian Koto Khoarai அவர்கள், அந்நாட்டில் அருள்பணித்துவ வாழ்வுக்கு இறையழைத்தல்கள் பெருகவும், கல்வியின் முன்னேற்றத்திற்கும், ஆற்றியுள்ள பணிகளைப் பாராட்டியுள்ளதோடு, அவரின் ஆன்மா நிறையமைதி அடைய, தான் செபிப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

கர்தினால் Khoarai அவர்களின் இறப்பை முன்னிட்டு, லெசோத்தோவின் Mohale’s Hoek ஆயர் John J. Tlhomola அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கர்தினால் Khoarai அவர்கள், அமலமரி தியாகிகள் சபையின் துறவியாக, நீண்டகாலமாக வெளிப்படுத்திய சான்று வாழ்வுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, அவரது மறைவால் வருந்தும் அனைவருக்கும் இறைவனின் ஆறுதல் கிடைப்பதற்குத் தான் செபிப்பதாகவும், திருத்தந்தை, அந்த தந்திச் செய்தியில் கூறியுள்ளார்.

தென்னாப்ரிக்கா நாட்டிற்குள் அமைந்துள்ள, லெசோத்தோ நாட்டில் 1929ம் ஆண்டில் பிறந்த கர்தினால் Khoarai அவர்கள், 1950ம் ஆண்டில், அமலமரி தியாகிகள் சபையில் சேர்ந்தார். 1956ம் ஆண்டில் அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருப்பொழிவு செய்யப்பட்ட இவர், 1975ம் ஆண்டில், லெசோத்தோவில், பாப்பிறை மறைப்பணி கழகங்களின் தேசிய இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

1977ம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட Mohale's Hoek மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்ட இவர், அந்நாட்டில் கத்தோலிக்கத் திருஅவை கல்வியறிவை வழங்குவதில் முதன்மை இடம் வகிக்கப் பணியாற்றினார். அந்நாட்டில் இறையழைத்தல், மற்றும், திருமுழுக்குப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவும், இவர் தீவிரமாக உழைத்தவர்.

ஏப்ரல் 17, கடந்த சனிக்கிழமையன்று, தனது 91வது வயதில் இறைபதம் அடைந்துள்ள கர்தினால் Khoarai அவர்களின் இறப்போடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 224 ஆகவும், இவர்களில் புதிய ஒரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய, எண்பது வயதுக்குட்டவர்களின் எண்ணிக்கை 126 ஆகவும் மாறின.

2016ம் ஆண்டு, நவம்பர் 19ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் Khoarai அவர்களை, அவரின் 87வது வயதில், கர்தினாலாக உயர்த்தினார். இதன் வழியாக, லெசோத்தோ நாட்டின் முதல் கர்தினால் என்ற பெருமையையும் இவர் பெற்றார். இவரின் இறப்போடு, தற்போது திருஅவையில் 88 நாடுகளைச் சார்ந்த கர்தினால்கள் உள்ளனர். மேலும், 49 கர்தினால்கள், துறவற சபைகளைச் சார்ந்தவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 April 2021, 15:27